நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நவம்பர் 1-ம் தேதி, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்று உரையாற்றிய சீமான், தமிழ்நாடு நாளை நவம்பரில் கொண்டாட மறுக்கும் தி.மு.க-வைக் கண்டித்துப் பேசியதும், `ஒருநாள் கோட்டையில் தமிழ்நாட்டுக் கொடியை ஏற்றியே தீருவேன்’ என ஆவேசமமாகக் கூறியதும், பேசுபொருளாகியிருக்கிறது.
1956-ம் ஆண்டு இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்நாளையே மாநில நாளாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கொண்டாடி வருகின்றன. 2019 எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக அறிவித்தார். பிறகு ஆட்சி மாறியதும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினோ.. `மெட்ராஸ் மாகாணம் `தமிழ்நாடு’ என பெயர் பெற்றது 1967-ம் ஜூலை 18-ம் தேதிதான். ஆகவே அந்த நாளே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்' என அறிவித்திருந்தார். தி.மு.க அரசின் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில தமிழ்தேசிய அமைப்புகள் ஏற்காமல், தொடர்ச்சியாக நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அனுசரிக்கிறார்கள்.
நவம்பர் 1-ம் தேதி நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டட்தில் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
``தமிழ்நாடு நாள் நவம்பர் 1-ல் கொண்டாடினால் ஐயா மா.பொ.சி , ஐயா நேசமணி, ஐயா சங்கரலிங்கனார் ஆகியோரின் போராட்டங்கள் மற்றும் புகழ் பற்றி பேச வேண்டியது வரும். ஆகவே இவற்றைத் தவிர்கவே நவம்பர் 1-ல் கொண்டாட மறுக்கிறது தி.மு.க" எனப் பேசினார் நா.த.க கொள்ளை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்.
தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் ``பிறந்தநாள் அன்று பிறந்தநாள் விழா கொண்டாடாமல், பெயர் வைத்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடச் சொல்கிறது இந்த கூமுட்டை திராவிட அரசு” என்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், காளியம்மாள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களும் பங்கேற்று தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடினர்.
இறுதியாக மைக்கைப் பிடித்த சீமான் ``கருணாநிதி இருக்கும் வரை நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள் என இருந்தது .இப்போது சீமானும் நாம் தமிழரும் இருப்பதால், இதற்கு எதிராகச் செய்கிறார்கள்.
இன்று எங்கோ ஓர் ஓரத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் இந்நாளை, அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என உறுதி ஏற்போம். தமிழ்நாட்டுக் கொடியை ஒருநாள் கோட்டையில் ஏற்றுவேன். தெருவெங்கும் பறக்க விடுவேன். இது வெற்று பேச்சு அல்ல, வெற்றி பேச்சு” என ஆவேசமாகப் பேசினார் சீமான்.
தொடர்ந்து பேசிய அவர், ``நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட அடையாளங்கள் சிதைக்கப்படும், தூய தமிழர் அடையாளங்கள் நிறுவுப்படும். வரலாறு முழுவதும் இந்த நிலப்பரப்பைத் தமிழ்நாடு என்றுதான் குறிப்பிட்டு வருகின்றனர். திட்டமிட்டே தமிழர்கள் செய்த அனைத்தையும் மறைத்து அழித்துவிட்டு, இவர்கள் செய்ததுபோல் சூடிக் கொண்டார்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.
`எல்லாம் பேசிவிட்டு, 2 சீட்டுகளுக்கு எங்களிடம் வருவார்' என என்னை இதர அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஒருநாள் நீங்கள் என்னிடம் பேரம் பேசி 2, 3 சீட்களுக்கு என் பின்னால் வந்து நிற்ப்பீர்கள்... தனித்து நிற்பதையும் விமர்சிக்கிறார்கள், தனித்து நிற்போம் தனித்துவத்தோடும் நிற்போம்” என்றார்.
from India News https://ift.tt/Lwu7S6p
0 Comments