IMEC: `இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் அரசியலில் இந்தியாவைக் கோர்த்துவிட்ட பைடன்?' - பின்னணி காரணம் என்ன?!

`இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா (India-Middle East-Europe Economic Corridor) இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், `அதிபரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது' என அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் தலை உருளக் காரணம் என்ன?

ஜோ பைடன் - மோடி

அதிபர் ஜோ பைடன் பேச்சு:

நேற்று முந்தினம்(26-10-2023) வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட `இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டத்தை (IMEC)' தடுப்பதற்காக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நாம் செய்துகொண்டிருக்கும் முன்னேற்றம்தான் இந்த தாக்குதலுக்கான காரணம் என என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது!" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு:

இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை, `அதிபர் ஜோ பைடனின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது' என விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி (National Security Council's Strategic Communications Coordinator - John Kirby) பேசியபோது, ``அதிபர் ஜோ பைடன் உண்மையில் கூறவந்த விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அவர் என்ன கூறினாரென்றால், இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டத்தின் மூலம், இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நாம் ஏற்படுத்த முயற்சிக்கும் இயல்பான உறவு மற்றும் செயல்முறை ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இஸ்ரேல் - சவுதி அரேபியாவுக்கு இடையே பகைமை விலகி, ஒற்றுமைக்கான தீர்வு எட்டப்பட்டிருப்பதால், அந்தத் `தீர்வு' தான் ஹமாஸை கோபம்கொள்ளச் செய்து தாக்கல் நடத்த தூண்டியிருக்கும்!" என்ற பொருளில் அமெரிக்க அதிபர் பேசியதாக ஜான் கிர்பி விளக்கமளித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகை - ஜான் கிர்பி

IMEC - பொருளாதார வழித்தடமும் சிக்கலும்:

ஐரோப்பா-ஆப்ரிக்கா- ஆசியா கண்டங்களை `பெல்ட் அண்ட் ரோடு' எனும் பொருளாதார வழித்தடம் மூலம் இணைக்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு சீனா கொண்டுவந்தது. அதாவது, சீனாவின் பண்டைய பாரம்பரிய பொருளாதார வழித்தடமான `பட்டுப்பாதையை' மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சாலை, ரயில் மற்றும் கடல்வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தைக் கையிலெடுத்தது. இந்த திட்டத்தில் சுமார் 154 நாடுகளை சீனா சேர்த்துக்கொண்டது. இந்த திட்டம் நிச்சயம் அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்று பல்வேறு உலக நாடுகளும் கருதின.

அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் IMEC - India-Middle East-Europe Economic Corridor எனும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிவித்தனர். அப்போது பேசிய இந்தியப் பிரதமர் மோடி, ``IMEC பொருளாதார வழித்தட திட்டம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும். அதற்கான முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டிருப்பது உலக வரலாற்றில் இடம்பெறும்!" எனப் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

ஜி-20 கூட்டம்

இந்த நிலையில், IMEC திட்டம் முதற்கட்டமாக இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் தொடங்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளைக் கடந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீஸ் நாடு வரைக்கும் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இந்த திட்டத்தில் இஸ்ரேலும் அங்கம் வகிப்பதுதான். ஏற்கெனவே பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பகை உணர்வு இருக்கிறது. பல அரபு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்க மறுக்கின்றன.

இந்தியாவின் IMEC திட்டம்

இந்த இக்கட்டானச் சூழலில் IMEC பொருளாதார வழித்தட திட்டத்தை இருதரப்பு சம்மதத்துடன் கொண்டுபோகும் சவால் இந்தியாவுக்கு இருந்தது. இருப்பினும் பொருளாதார நலனுக்காக இந்தியா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் ஒருமனதான இணைந்து இந்தத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதனால், பாலஸ்தீனம் - ஹமாஸ் அமைப்புக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அரபு நாடுகளின் ஆதரவு கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஹமாஸ் அமைப்புக்குத் தோன்றியிருக்கலாம். ஹமாஸின் இந்த அச்ச உணர்வுதான் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இஸ்ரேல் மீதான தாக்குதலாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பி இருக்கிறார் பைடன்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/inbKg8p

Post a Comment

0 Comments