விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவுசெய்திருக்கிறது. அதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கையெழுத்திட மறுத்த ஆர்.என்.ரவிக்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை எனப் பல தியாகங்களைச் செய்து, தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பாளி மக்களுக்கு அர்ப்பணித்தவர் என்.சங்கரய்யா.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தார் சங்கரய்யா. படிப்பு முக்கியமா… நாட்டின் விடுதலை முக்கியமா என்று கேள்வி அவருக்குள் எழுந்தது. நாட்டின் விடுதலையே முக்கியம் என்று முடிவெடுத்த அவர், விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார்.
அதே நேரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு மாணவர்களைத் திரட்டினார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், சங்கரய்யாவை கல்லூரியிலிருந்து நீக்க முடிவுசெய்தது. அதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், கல்லூரி நிர்வாகம் பின்வாங்கியது.
பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு
15 நாள்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. அவரால் கல்லூரித் தேர்வை எழுத முடியாமல் போனது. அப்போது, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அவர் அனுபவித்தார்.
தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா, நான்காண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதியன்றுதான் சிறையிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. விடுதலைக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார்.
கருத்து வேறுபாடு காரணமாக, 1964-ல் 35 உறுப்பினர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்துவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அந்த 35 பேரில் சங்கரய்யாவும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சங்கரய்யாவுக்கு தற்போது 101 வயதாகிறது. தமிழ்நாடு அரசியலுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, ‘தகைசால் தமிழர்’ விருதை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அவருக்கு வழங்கியது.
தற்போது, தமிழ் சமூகத்துக்கு என்.சங்கரய்யா ஆற்றியிருக்கும் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதென்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவுசெய்திருக்கிறது. வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கான தீர்மானமும் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார் என்று செய்தி தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி. “சுதந்திரப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, எட்டாண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஏழைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக அளப்பரிய பங்கை ஆற்றியிருக்கிறார். அவருக்கு வரக்கூடிய பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவுசெய்து, கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அதற்கான தீர்மானத்தை ஆட்சிமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றியது.
அதற்கான அனுமதி அளிக்கும் கோப்பில் கையெழுத்திட பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார் அமைச்சர் கே.பொன்முடி.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்துக்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் அதை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் வந்து பட்டம் தருவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் அதற்கு கையெழுத்திட மறுத்து நிறுத்தியுள்ளார்.
விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். இந்த சர்ச்சை குறித்து ஆளுநர் அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் இல்லை.
அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் ஆர்.என். ரவி, ஒரு பா.ஜ.க தலைவரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தேச விடுதலைக்காகப் போராடி, சிறைக்கொடுமைகள் அனுபவித்த என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதா என்று ஆர்.என்.ரவிக்கு எதிராக விமர்சனம் எழுந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/oL9DVs0
0 Comments