புதுச்சேரி: "முதல்வர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி"- சந்திர பிரியங்கா விவகாரத்தில் நாராயணசாமி தாக்கு

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ``என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்காவை நீக்கிவிட்டு, காரைக்கால் வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க ஆளுநரிடம் பரிந்துரை கொடுத்தார்.

நாராயணசாமி

அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. அதை தெரிந்து கொண்டுதான் சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திர பிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல் அவரை டிஸ்மிஸ் செய்யவும், அவருக்கு பதிலாக திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் ஆளுநர் தமிழிசை மூலம் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. சந்திர பிரியங்கா தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம்.

அதற்கு ஆளுநர் தமிழிசை, `ஆறு மாதங்களுக்கு முன்பே அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். ஆறு மாதங்களாக அவர் திறமையாக செயல்படாததால்தான் பதவிநீக்கம் செய்வதற்கான கோப்பை முதல்வர் கொடுத்தார், அதை உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்வர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை’ என்று தெரிவித்திருக்கிறார். தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்வருக்கும், ஆளுநருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்வர் கொடுத்த கடிதம் போன்றவற்றை ஆளுநர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது, முரண்பாடானது.

முதல்வர் ரங்கசாமியுடன் சந்திர பிரியங்கா

முதல்வர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி, ஒப்புதல் வந்த பிறகு அது தொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. ஆகவே தார்மீக பொறுப்பேற்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே, முதல்வர் அவரை பதவிநீக்கம் செய்து விட்டார் என்று கூறுகிறார். ஆனால் அது தொடர்பாக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா ?

அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். `நான் சாதியரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளேன். ஆண் வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்து என்னால் செயல்பட முடியவில்லை' என்று மன உளைச்சலுடன் தன்னுடைய கடிதத்தில் எழுதியிருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதுபோன்ற கடிதத்துக்கு, புதுச்சேரி அரசில் இருந்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இதில் முதல்வர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. மத்திய  பட்டியலின சமுதாயத்தின் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் நடைபெறும் ஊழல் பகிரங்கமாக வெளியே வருகிறது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2,650 கடன் வாங்கி அதை வைத்து சாலைகள், வாய்க்கால் கட்டும் திட்டங்களை செய்து வருகின்றனர். அதில் 30 சதவிகித கமிஷன் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பங்கு போட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பகிரங்க ஊழலை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இந்த ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/puYytBq

Post a Comment

0 Comments