அமெரிக்கா அங்கம் வகிக்கும் நோட்டோவில் சேரக் கூடாது என எவ்வளவோ எச்சரித்தும் உக்ரைன் கேட்காததால், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி, ரஷ்ய அதிபர் புதினின் ஆணைக்கிணங்க, உக்ரைன்மீது போர்த்தொடுக்க ஆரம்பித்தது ரஷ்ய ராணுவம். போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. அமெரிக்காவின் ஆயுத மற்றும் நிதியுதவியால் உக்ரைன் முடிந்த அளவுக்குத் தாக்குப்பிடித்துவருகிறது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், ஐ.நா சபை போன்றவற்றின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத ரஷ்யா, தன்னுடைய ராணுவ ஆயுதங்கள் மூலம், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகளை மறைமுகமாக எச்சரித்தது. இந்த நிலையில், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் வேலைகளைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிபர் புதின், ``பல ஆயிரம் மைல்கள் தூரம் வரை செல்லக்கூடிய அணுசக்தி திறன்கொண்ட க்ரூஸ் ஏவுகணையான Burevestnik-ஐ ரஷ்யா வெற்றிகரமாகப் பரிசோதித்திருக்கிறது. மேலும், புதிய தலைமுறை அணு ஆயுதங்களின் மற்றொரு முக்கிய அங்கமான சர்மாட் (Sarmat) எனும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் வேலையை ரஷ்யா கிட்டத்தட்ட முடித்துவிட்டது.
அதோடு, ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த சரியான சிந்தனை உள்ளவர்கள் யாரும் இல்லை. ஒருவேளை அப்படி யாரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், எங்களிடமுள்ள பல ஏவுகணைகள் வானில் பாயும். பிறகு, ஒரு எதிரிகூட உயிர்பிழைக்க வாய்ப்பிருக்காது" என்று கூறினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், 1990 முதல் அணு ஆயுத சோதனையை நடத்தாத ரஷ்யா, மீண்டும் அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை மறுத்த புதின், ``அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. அதேசமயம் ரஷ்யா அதில் கையெழுத்திட்டு ஒப்புதலளித்திருக்கிறது. எனவே, கோட்பாட்டளவில் ரஷ்ய நாடாளுமன்றம் தனது ஒப்புதலை திரும்பப் பெறுவதும் சாத்தியம்" என்று தெரிவித்தார்.
from India News https://ift.tt/5QSj0Ag
0 Comments