கடந்த வாரம் கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் ரெளடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் தமிழ்நாடு அரசியல் தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. `தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை, ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை' என அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கொளுத்திப் போட, மற்றொரு முனையில் `இதன் பின்னணியில் பா.ஜ.கதான் இருக்கிறது' என தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சந்தேகத்தைக் கிளப்பிவிட ராஜ்பவனை மையமாக வைத்து அனல் தெறிக்கிறது அரசியல்.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தின் கேட் அருகே ரெளடி கருக்கா வினோத் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அடுத்த பாட்டிலை வினோத் வீசும்போதே, பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்ப, இந்த சம்பவம் குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ``ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" எனத் தெரிவித்தது. அதாவது `விஷமிகள்' எனவும், `ராஜ்பவனுக்குள் வீசி' என ஆளுநர் மாளிகைத் தரப்பே குற்றம்சாட்டி எக்ஸ் தளத்தில் குறிப்பு வெளியிட பிரச்னை தீவிரமானது.
அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை தீவிரமாக்கும் வகையில், ``ராஜ்பவனின் தாக்குதல் குறித்தப் புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவுசெய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்ட்ரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது!" என ஒரு அரசியல் கட்சி அறிக்கை வெளியிடுவதைப்போல ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த சம்பவத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கின் நிலையைக் கடுமையாகச் சாடினர்.
அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு காவல்துறை, `பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஒரேயொரு நபர், ஆளுநர் மாளிகை சொல்வதைப் போல பலர் ஈடுபடவில்லை! அதேபோல ஆளுநர் மாளிகைக்குள் தாக்குதல் நடத்தப்படவில்லை; அவர் (கருக்கா வினோத்) எறிய முற்பட்ட இரண்டு பாட்டில்கள் வெளிப்புற சாலையில்தான் விழுந்தன. பின்னர், அவர் பாதுகாப்பு போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையைச் சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை!" எனக் கூறி அதற்கான சிசிடிவி வீடியோ ஆதரத்தையும் வெளியிட்டனர்.
அந்தநிலையில் தி.மு.க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ``ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரைச் சிறையிலிருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பா.ஜ.க-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பா.ஜ.க வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாகத் தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ``ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, தி.மு.க நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பா.ஜ.க வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பா.ஜ.க கட்சி பொறுப்பிலிருந்து 2021-ம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு, ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம்தர இணைய ஊடகங்களைப் போல பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்" என வசைபாடியது.
இந்தநிலையில், ஆளுநர் மாளிகை வளாகத்தில் வெடிகுண்டு வீசிய குற்றவாளி கருக்கா வினோத் ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் தி.நகர் டாஸ்மாக் கடை, தேனாம்பேட்டை காவல்நிலையம், பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார். அவரை முன்பு பிணையில் எடுத்தது பா.ஜ.க வழக்கறிஞராக இருந்த முத்தமிழ் செல்வகுமாரும் அவருடைய ஜூனியர்களாக இருந்த எசக்கி பாண்டியும் நிசோக்கும்தான் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பிபிசி தமிழ் ஊடகத்துக்கு விளக்கமளித்திருக்கும் வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், ``கருக்கா வினோத்தின் மனைவி கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கான பிணை மனுவை தாக்கல் செய்தேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை. இசக்கி பாண்டியும் நிசோக்கும் என்னுடைய ஜூனியர்கள்தான். அதில் எந்த அரசியலும் இல்லை. அதேநேரம், 2021-க்குப் பிறகு நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை!" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது!" எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதனிடையே, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “சென்னை ஆளுநர் மாளிகை மீதான தாக்குதல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும். திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்தத் தாக்குதல் சம்பவம் காட்டுகிறது.
ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடத்திய நபரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் திமுக பிரமுகர் என்பதை மறைத்து சட்டத் துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் விஷயத்தை திசை திருப்புகிறார். இது ஒரு தனிநபர் செய்யக் கூடிய காரியம் அல்ல. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை விசாரணை செய்ய வேண்டும். இதனை என்ஐஏ அல்லது சிபிஐ போன்ற அமைப்புகளால்தான் விசாரணை செய்ய முடியும்.” என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை காவல்துறை ஒருபுறம் மேற்கொண்டிருக்க, ஆளுநர் மாளிகையும், பாஜக-வும் தமிழ்நாடு அரசும் பொதுவெளியில் வார்த்தைகளால் விமர்சித்துக்கொண்டிருக்கும் அணுகுமுறை தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Rz8D3E5
0 Comments