கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னைன கானத்தூர் பகுதியில் தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இந்த வீட்டின் காம்பவுன்ட் சுவர் முன்பாக நேற்று முன்தினம் இரவு 45 அடி உயரமுள்ள பி.ஜே.பி கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கொடிக் கம்பம் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அந்தப் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி இணைப்புக்கு அருகில் இருந்ததாலும், ஆபத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளும் போலீஸாரும் முடிவுசெய்தனர். அதன்படி கானத்தூர் போலீஸார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக் கம்பத்தை அகற்ற சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
இது குறித்து பி.ஜே.பி-யினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடிக் கம்பத்தை கிரேன் மூலம் அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்தபோது, பி.ஜே.பி துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பி.ஜே.பி-யினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாருக்கும் பி.ஜே.பி-யினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனால் வேறுவழியின்றி போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் காயமடைந்தனர். அதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது. இந்தச் சம்பவத்தில் கிரேன் இயந்திரத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக கானத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து 5 பேரைக் கைதுசெய்தனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கரு.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டு, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
அதைத் தொடர்ந்து, அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் பாதுகாப்புடன் அகற்றினர். போலீஸார் தாக்கியதில் காயமடைந்த பா.ஜ.க-வினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் பதிவில் அண்ணாமலை, ``பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைதுசெய்யப் போவதுபோல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
தி.மு.க அரசின் உத்தரவின்பேரில், நள்ளிரவில் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பா.ஜ.க சகோதர சகோதரிகள்மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்துப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக பா.ஜ.க-வின் ஒரு கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக் கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடிக் கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8-ம் தேதி (100-வது நாள்) காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் முன்னிலையில் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும், ஊழல் தி.மு.க அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நேற்று கைதுசெய்யப்பட்டார். அமர் பிரசாத் ரெட்டியின் வீட்டுக்கே சென்று போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, அமர் பிரசாத் ரெட்டி புழல் மத்திய சிறையில் காவலில் வைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/L90XD7U
0 Comments