மினி பொது தேர்தலாக கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியை, பா.ஜ.க மிகவும் முக்கியமானதாக கருதுகிறது. இதையடுத்து, தேர்தலில் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் அனைவரையும் களத்தில் இறக்கி வருகிறது. ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜ.க அறிவித்திருக்கிறது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஒதுங்கி இருந்தார். இதனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கருதப்பட்டது. முதல் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனாலும் வசுந்தரா அமைதி காத்து வந்தார்.
ஆனால் பா.ஜ.க.வெளியிட்டுள்ள 83 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் வசுந்தராவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. தொடர்ந்து ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜல்ரபதன் தொகுதியில் வசுந்தரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் மாநில எதிர்க்கட்சி தலைவரான ராஜேந்திர சிங் தொகுதியை மாற்றி தாராநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சுரு தொகுதியில் ராஜேந்திர சிங் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் இப்போது கட்சி, அவரது தொகுதியை மாற்றிவிட்டது. இரண்டாவது பட்டியலில் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களுக்கும் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வசுந்தரா களத்தில் இறக்கப்பட்டு இருப்பதால் முதல்வர் பதவிக்கு வசுந்தராவிற்கும், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பட்டியலில் 7 எம்.பி-க்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.
காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 33 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வந்தது. அதனால் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியும் மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்காதது குறித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/tAT2GkE
0 Comments