பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவித்த பிறகு, ‘கூட்டணி முறிவு குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் எதுவும் சொல்லவில்லை..’ என்று பலரும் கேள்வி எழுப்பினார். இப்போது, அவரும் வாய்திறந்துவிட்டார். ‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
சேலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது, ‘இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வந்துள்ளீர்கள். நீங்கள் எண்ணியபடியே அ.தி.மு.க நடந்துகொண்டது. அதேபோல நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், ‘அனைத்து இஸ்லாமிய பெருமக்களிடம் நீங்கள் நேரடியாகச் சென்று அ.தி.மு.க எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற உறுதியைக் கொடுக்கலாம். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கண்ணை இமைக் காப்பதைப் போல சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதில் முதல் ஆளாக இருப்போம்’ என்று உறுதியளித்தார் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமியே அறிவித்துவிட்ட பிறகும், பா.ஜ.க-வினர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவருகிறார்கள். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க-வின் மேலிடத் தலைவர்களை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி, மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார்.
கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகிவிட்டதால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணியைப் போன்ற ஒரு கூட்டணியை இப்போதும் அமைத்துவிடலாம் என்று பா.ஜ.க கருதுவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், டெல்லி சென்ற அண்ணாமலை, புதிய கூட்டணிக்கான ஆலோசனையுடன் சென்று வந்ததாக பா.ஜ.க வட்டாரம் கூறுகிறது.
அதில் நிச்சயமான ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறது அரசியல் வட்டாரம். பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகியது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதற்கான தண்டனையை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார். பா.ஜ.க-வின் உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார். பா.ஜ.க-வை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, யாருடன் மெகா கூட்டணி அமைக்கப்போகிறார். பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதால் அ.தி.மு.க வசமுள்ள இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்னம் போனால் அ.தி.மு.க வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதறும்’ என்றார் தினகரன்.
எப்படியோ, பா.ஜ.க கூட்டணியில் சேருவதற்கு டி.டி.வி.தினகரன் தயாராகிவிட்டார். ஏற்கெனவே தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்துவிட்டார்கள். இவர்கள் இருவரும் பா.ஜ.க-வுடன் கைகோக்கப் போகிறார்கள் என்கிற செய்தியும் உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் செல்லப்போகிறார் என்று செய்திகள் அடிபடுகின்றன. பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கும் திட்டத்துடன் அவர் டெல்லி செல்கிறாராம்.
இவர்கள் இருவரும் தங்களுடன் கூட்டணியில் இணைவதால் தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என்று பா.ஜ.க கணக்குப் போடுகிறது. மற்றபடி, வட மண்டலத்திலோ, மேற்கு மண்டலத்திலோ இவர்களுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தினகரனையும் பன்னீர்செல்வத்தையும் பொறுத்தளவில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என்ற மனநிறைவை அடைவார்கள். அதைத்தாண்டி பெரிதாக என்ன நிகழ்ந்துவிடப்போகிறது?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/VJt3oAF
0 Comments