மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தாலும், மருந்து பற்றாக்குறையாலும் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை மருத்துவமனையின் டீன் உறுதிபடுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''கடந்த 24 மணி நேரத்தில் ஆறு ஆண் குழந்தைகளும், ஆறு பெண் குழந்தைகளும் இறந்துள்ளன. இது தவிர மேலும் 12 நோயாளிகள் பாம்பு கடி உட்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். பல ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறோம்.
80 கிலோமீட்டர் சுற்றளவில் இது போன்ற மருத்துவமனை இது ஒன்றுதான் இருக்கிறது. எனவே நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர். நாங்கள் ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மருந்து வாங்க திட்டமிட்டோம். ஆனால் அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே உள்ளூரில் மருந்து வாங்கி பயன்படுத்துகிறோம்'' என்று தெரிவித்தார்.
இந்த உயிரிழப்புகளை மகாராஷ்டிரா மருத்துவ கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஸ்ரீப் உறுதிபடுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``ஆறு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 7 நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இரண்டு பேர் பாம்பு கடித்து இறந்துவிட்டனர். மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் அசோக் சவான், ''மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் இல்லை. பலர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு பதில் வேறு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இயந்திரங்கள் பல இயங்கவில்லை. 500 நோயாளிகள் சிகிச்சை பெறவேண்டிய மருத்துவமனையில் 1,200 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, ``இந்த உயிரிழப்புகளுக்கு மூன்று எஞ்சின் அரசுதான் பொறுப்பு” என்று குற்றம் சாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேயில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/QseLf9U
0 Comments