டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இன்று பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரேசிலில் நடக்கும் ஜி20 அமைப்பின் உயரடுக்கு குழுவின் தலைவர் பதவிக்கான அடையாளக் குறியீடை (தலைமை பொறுப்பை) பிரேசில் அதிபரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/97fb96b6-a0f8-48b0-997d-09da007cf8fd/F5pjxp9WoAACFwS.jpg)
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, ``வளர்ந்து வரும் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகளில் விவாதிக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு மோடிக்கு வாழ்த்துகள். சமூக உள்ளடக்கம், பசிக்கு எதிரான போராட்டம், எரிசக்தி மாற்றம், நிலையான வளர்ச்சி ஆகியவையே ஜி20-க்கான முன்னுரிமைகள். உலக வங்கி மற்றும் IMF-ல் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என விரும்புகிறோம்.
மில்லியன் கணக்கான மனிதர்கள் இன்னும் பட்டினி எனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலகில்தான் வாழ்கிறோம். சமத்துவமின்மை - வருமான சமத்துவமின்மை, சுகாதாரம், கல்வி, உணவு, பாலினம், இனம் ஆகியவற்றுக்கான அணுகல் இந்த முரண்பாடுகளின் தோற்றத்தில் இருக்கிறது. எனவே, சமத்துவமின்மை பிரச்னையை ஆக்கபூர்வமான சிந்தனைகள் மூலம் நாம் எதிர்கொண்டால் மட்டுமே இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்" எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜி20 மாநாடு முடிந்ததையொட்டி உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
from India News https://ift.tt/qS4jdzJ
0 Comments