ராஜஸ்தானில் முந்தைய வசுந்தரா ராஜு ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை முதல்வர் அசோக் கெலாட் விசாரிக்க மறுப்பதாக கூறி காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார். அவரின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அசோக் கெலாட் நேற்று வசுந்தராவை சந்தித்து பேசியிருக்கிறார்.
ராஜஸ்தானில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார்.
இதே நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜுவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு பேரும் தனியாக சந்தித்து பேசியிருக்கிறனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோரே, சபாநாயகர் டாக்டர் ஜோஷியும் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படம் காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டிற்கும், அசோக் கெலாட்டிற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பேரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தது. அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசவில்லை.
ஆனால் அதற்கு முன்பு முந்தைய வசுந்தரா ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சச்சின் பைலட் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார். ஆனால் அசோக் கெலாட் அக்கோரிக்கையை கடைசி வரை ஏற்கவே இல்லை. தற்போது அசோக் கெலாட்டை வசுந்தராவும், பா.ஜ.க.எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திராவும் சந்தித்து பேசி இருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.
அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் சேர்ந்து விடக்கூடும் என்று எல்லாம் பேசுகிறார்கள். ஏற்கனவே சச்சின் பைலட்டை காங்கிரஸ் முதல்வராக்க விரும்பிய போது அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி விலகப்போவதாக எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/ZETfLdu
0 Comments