இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மருத்துவப் படிப்பவர்களுக்கு (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள் மார்ச் 14-ம்தேதி வெளியிடப்பட்டது.
பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்ணும் இதற்கான கட்-ஆப்பாக நிர்ணயிக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மற்ற இடங்களுக்கான மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இதன் முடிவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை ஜீரோ பெர்சென்டைல் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீட் தேர்வின் பலன் என்ன என்றால் '0' தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் '0' தான் என்று வரையறுப்பதன் மூலமாக NEET என்றால் National Eligibility Cum Entrance Test என்பதில் உள்ள Eligibilityக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
கோச்சிங் சென்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது. NEET = 0 என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். NEET என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அகிலன், "அகில இந்திய அளவில் நடந்த மூன்று சுற்று, தமிழகத்தில் நடந்த இரண்டு சுற்று கலந்தாய்வில் பெரும்பாலான அரசு இடங்கள் நிரம்பிவிட்டன. தனியார் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பவில்லை. தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால் தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம்.
இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும். இதைவிட தமிழக அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு சிறந்த ஒன்றாக இருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வேண்டுமென்றால் மத்திய அரசு நீட் தேர்வு நடத்திக்கொள்ளட்டும். தமிழக இடங்களுக்கு மாநில அரசே தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்" என்றார்.

பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேசுகையில், "மருத்துவ முதுநிலை படிப்புகளில் அனுமதிக்கான நீட் தேர்வுக்கு பிறகான கவுன்சிலிங்கில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டது என்று விமர்சிப்பவர்கள், அறியாமையில் பேசுவதாக பொருள் கொள்ள வேண்டும் அல்லது அரசியல் உள்நோக்கத்தோடு வன்மத்தை கக்குகிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழக முதல்வரும் இது குறித்து விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
சராசரி மதிப்பெண்(Percentile) என்றால் என்ன, விழுக்காடு (Percentage) என்றால் என்ன என்பதை பற்றிய புரிதல் இல்லாமல் முதலமைச்சர் பேசுவது வியப்பை அளிக்கிறது. கடந்த வருடம் கூட இதே முதுநிலை படிப்புகளில் நீட் தேர்வுக்கு பிறகான கவுன்சிலிங்கிற்கு '50 பெர்சன்டைல்' கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, இரு சுற்றுகளுக்கு பின்னர் காலியாக இருந்த முது நிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கின் இறுதி சுற்றில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 25 பெர்சன்டைலாக குறைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு பின்னர் கவுன்சிலிங்கில் குறிப்பிட்ட பெர்சன்டைல் மதிப்பெண் தான் 'கட்-ஆஃப்' என நிர்ணயிக்கப்படும்.
பின்னர் அந்த 'கட்-ஆஃப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் தவிர மீதம் உள்ள இடங்களுக்கு 0% பெர்சன்டைல் மட்டுமல்ல சில நேரங்களில் (-) மதிப்பெண் பெர்சன்டைல் பெற்றவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது முதல்வருக்கு தெரியுமா?. அதே போல் தான், இந்த ஆண்டும் முது நிலை படிப்புக்கான நீட் தேர்வுக்கு பின்பான கவுன்சிலிங்கில் 50 பெர்சன்டைல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்ததையடுத்து இரண்டு சுற்றுகள் கவுன்சிலிங் நடந்து முடிந்து விட்டன.
அந்த இடங்கள் போக மீதியுள்ள இடங்களுக்கு மூன்றாவது சுற்றில் '0' பெர்சன்டைல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது, வழக்கமான நடைமுறையே. அதாவது 50 பெர்சன்டைல்க்கும் குறைவாக பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் அனுமதிக்கப்படுவர். நமது முதல்வர் இந்த அறிவிப்பினால் நீட் தேர்வினால் ஏற்படும் பலன் பூஜ்யம் என்றும், அர்த்தமற்றது என்றும், தகுதி தேவையில்லையா என்றும், நீட் கண்துடைப்பு நாடகம் என்றும் விமர்சித்துள்ளார்.
அப்படியானால், தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் டான்செட் தேர்வுக்கு பின்னர் எம் .பி.ஏ., எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முது நிலை படிப்புகளில் கவுன்சிலிங்கில் '0' பெர்சன்டைல் மற்றும் - பெர்சன்டைல் பெற்றவர்கள் கூட அனுமதிக்கப்படுவதால் டான்செட் தேர்வு கண்துடைப்பா? நாடகமா? அர்த்தமற்றதா? பலனற்றதா என்று முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொள்கிறாரா?. நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது முறையல்ல என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து, நீட் தேர்வு குறித்த அரசியலை இனியாவது கைவிடுவார் என நம்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/7N4v2Xb
0 Comments