ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நீண்டகாலமாகப் பேசிவந்த பா.ஜ.க., தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டுவருவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்ற ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது.
இந்தியாவில் 1967 வரையில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டன. பிறகு, சில மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நடைபெற்றதால், தேர்தல்கள் நடைபெறும் காலகட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அதனால், நிறைய செலவாகிறது என்றும், மனித உழைப்பு விரயமாகிறது என்றும் ஒரு வாதம் வைக்கப்பட்டது. அதற்கு தீர்வாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் தேர்தல் செலவுகள் குறையும்' என்பது பா.ஜ.க கூறிவருகிறது. மேலும், `அடிக்கடி தேர்தல் வருவதை தவிர்த்தால் நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றில் ஆட்சியாளர்களால் கூடுதல் கவனம் செலுத்த முடியும்' என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
மும்பையில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நிகழ்வதற்கு முதல் நாள் இதற்கான அறிவிப்பை மத்திய பா.ஜ.க அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க., இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருவதற்கு ஆதரவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, ‘நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
இதே எடப்பாடி பழனிசாமி, 2018-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அப்போது, அரசியல் கட்சி தொடங்கப்போவதாகக் கூறிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் ரஜினிகாந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து அப்போது ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ‘ஒரே நாட ஒரே தேர்தல் முறையை ரஜினிகாந்த் ஆதரிப்பது, அவரது முடிவு’ என்று கூறினர்.
2018-ம் ஆண்டு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு எழுத்து மூலமாக அ.தி.மு.க அரசு பதில் அனுப்பியது. அதில், 'தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு வரை இருக்கிறது. இந்த சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுள்காலம் குறைக்கப்படும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்ற பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறிவிட்டது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. தி.மு.க ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் ஏவல்துறையாக காவல்துறை மாறிவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 -ம் ஆண்டு சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்' என்றார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில், `நேர்வழியில் தி.மு.க வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை. ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலில் தில்லுமுல்லு செய்து முறைகேடாக வெற்றி பெற தி.மு.க முயன்றால், அ.தி.மு.க சும்மா இருக்காது. தி.மு.க தொடர்ந்து தவறு செய்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்கும் நிலை ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது ஆட்சியதிகாரத்தில் அ.தி.மு.க இருக்கும்' என்றார்.
`2021-ல் ஆட்சியதிகாரத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி, எப்படியாவது மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னம் இரண்டரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரை அவரால் பொறுத்திருக்க முடியவில்லை போலும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் வந்துவிட்டால், ஸ்டாலின் அரசு கலைக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும்... அப்போது வெற்றிபெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?’ என்கிறார்கள் திமுக-வினர்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/eOBhZwo
0 Comments