முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் வகையில், கரூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது செந்தில் பாலாஜி, 'தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 11:05 மணிக்கு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம். அதைத் தடுத்தால் அந்த அதிகாரி இருக்கமாட்டார்' என்று பேசினார்.
அவர் சொன்னதுபோல் தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களை வைத்து மணல் அள்ளலாம் என்ற உரிமம் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, சில திருத்தங்கள் செய்து, ஒரு சிறிய பொக்லைன் இயந்திரம், இரண்டு சிறிய டிப்பர் லாரிகளில் மணல் அள்ளலாம் என திருத்தப்பட்டது. ஆனால், இந்த மணல் மாஃபியாக்கள் கருணாநிதி குடும்பத்துக்கு 500 கோடி ரூபாய் கப்பம் கட்டுவதற்காக காவிரி மணலைச் சுரண்டி கொள்ளையடிக்கின்றனர்.
கரூரில் இரண்டு இடங்களில் லாரிகளில் மணல் அள்ளுவதற்கும், இரண்டு இடங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக மணல் அள்ளுகின்றனர். ஆனால், மூன்று மாதங்களுக்குள் காவிரி ஆற்றில் மணலைச் சுரண்டிவிட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த பிறகு, மணல் மாஃபியா கும்பல் ஒளிந்து கொண்டது. கரூரில் மட்டும் ஒரு நாளைக்கு 2,000 லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. நாள் ஒன்றுக்கு பத்து லாரிகளில் மணல் அள்ளியதாகக் கணக்கு காட்டப்படுகிறது. ஒரு லாரி மணல்18,000 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 வருடங்களாக ஆன்லைன் வழியாக அரசு மணல் விற்பனை செய்தது.
ஆனால், தி.மு.க அரசு இன்று 500 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு தனியாருக்கு விற்பனை செய்துவிட்டது. இந்த அரசுமீது இப்படி மக்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த அரசின் முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல், மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அதனால், மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்ததை எண்ணி வருந்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் யாரை வேட்பாளர்களாக அறிவிக்கின்றாரோ, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/AQuTker
0 Comments