`சனாதானம்’ முதல் `பாரதம்’ வரை - அதிமுகவின் `கப்சிப்’ அரசியலால் பலனா... பாதகமா?!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு' மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், " 'சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். `சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்'" என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்தை, 'சனாதானம் இந்து மதத்தின் அடிநாளம். அதை பின்பற்றும் எல்லாரையும் உதயநிதி இனப்படுகொலை செய்ய சொல்கிறார்' என்ற பாஜக மற்றும் அதன் கிளை, துணை அமைப்புகள் சர்ச்சையாக்கினர். மேலும், 'இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுகவின் கருத்து இந்துக்களுக்கு எதிரானது' என்று மத்திய அமைச்சர் அமித் ஷா முதல் நடிகை குஷ்பு வரை செல்லுமிடமெல்லாம் பேசி வருகின்றனர்.

இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள மேற்வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உதயநிதி பேசியது தவறென கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஜி20 மாநாட்டின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய குடியரசு தலைவரை குறிப்பிடும்போது பாரத குடியரசு தலைவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களிலும் அ.தி.மு.க பெரிய அளவில் கருத்து தெரிவிக்க முடியாமல் அடக்கி வாசித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

இப்படி அமைதியாக இருப்பது தான் அ.தி.மு.க-வுக்கு நல்லதென தலைமை நினைப்பதே இதற்கு காரணம் என்று நம்மிடம் பேசத்தொடங்கினார் சீனியர் ஒருவர். தொடர்ந்து பேசிய அவர், "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து திராவிட கொள்கைக்கு ஆதரவாக அ.தி.மு.க செயல்பட்டதே தவிர, அதற்கு எதிரான சித்தாந்தங்களை பேசியதே கிடையாது. அம்மா காலத்திலும் அதுதான் தொடர்ந்தது. தற்போது சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதியின் கருத்து தேசிய அளவில் பேசுப்பொருளாக இருப்பதில், பா.ஜ.க-வின் பங்குதான் அதிகம். இந்தியா கூட்டணியில் உள்ள முரண்பாடுகளை தேசிய அளவில் பா.ஜ.க பேசுகிறது. இதில் தவறு இல்லை. குறிப்பாக, உதயநிதியின் கருத்து தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே கள யதார்த்தம். அதனால்தான், அந்த விஷயத்தில் சித்தாந்தம் சார்ந்து அ.தி.மு.க கருத்து கூறமுடியவில்லை.

ஆனால், தி.மு.க-வின் சனாதான பேச்சுக்கு எடப்பாடி தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். சொல் ஒன்றும் பேச்சு ஒன்று என்றுதான் தி.மு.க எப்போதுமே இருந்திருக்கிறது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தி.மு.க-வின் உயர் பொறுப்பில் இருக்கும் யாராவது சென்று பார்த்து இருக்கிறார்களா? தற்போது நாங்குநேரி பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டிய சம்பத்தில்கூட, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், தாக்குதலை நடத்திய ஏழு பேரியில் மூன்று பெயருக்கு பெயில் கொடுக்க, தி.மு.க நிர்வாகிகள் துணை நின்று இருக்கிறார்கள். இப்படி பல சம்பவம் இருக்கிறது. இன்னும் பல சம்பவங்களை கூறலாம்.

இந்தியா - பாரதம் பெயர் சர்ச்சை

நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதில் கூட தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற திமுக தலைவருமான டி.ஆர்.பாலு ஆதரவு கொடுக்கிறார். உதயநிதி பேசுவதற்கு பா.ஜ.க எதிர்வினையாற்றுவதும், பாரத் பெயர் மாற்றுவதற்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதுமென திரை மறைவில் பா.ஜ.க தி.மு.க கூட்டணி அமைத்து இருப்பது தெரிகிறது. ஆனால், இதை எங்களால் வெளிப்படையாக பேசமுடியதாநிலை இருக்கிறது. அதனாலயே இவ்விரு சம்பவங்களில் அ.தி.மு.க அடக்கி வாசிக்கிறது. இது அரசியல் ரீதியாக தமிழ்நாட்டுக்குள் எங்களுக்கு பின்னடைவை தராது. ஏனென்றால், இவ்விரு விவகாரங்களும் தமிழ்நாட்டுக்குள் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை." என்றார் விரிவாக...

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஸ்யாமிடம் பேசினோம்.

``சனாதானம், பாரதம் என்ற இரு பெரு விவகாரங்களிலும் அதிமுக தனது கருத்தை தெளிவாக சொல்லவில்லை. 1950-களில் பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்கும்போது, அண்ணா, ' நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்' என்று சொன்னார். சனாதானத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு போராளியாக இருந்தார். அவரின் பெயரை தாங்கியிருக்கும் அண்ணா தி.மு.க., சனாதான சர்ச்சை கருத்து சொல்லாமல், திமுகவின் திசை திரும்பு முயற்சி என்று கடந்து செல்கிறார்கள். அதேபோலதான், பாரதம் என்ற பெயர் சர்ச்சையிலும் நடக்கிறது.

தராசு ஸ்யாம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை... இனி அனைத்து பாரதம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமென்று மாற்றிக் கொள்ளவார்களா..? தி.மு.க-வின் எதிர்ப்பு வாக்கு வங்கிதான் அ.தி.மு.க-வுக்கு மூலதனம். அதை பிரதானமாக வைத்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால், அதைதான் தற்போது பாஜக குறிவைத்து இயங்குகிறது. அதற்கு வழிவிடுவதுபோல அ.தி.மு.க-வின் அடக்கிவாசிப்பு இருக்கிறது. அதிமுக-வில் தற்போது கருத்து உருவாக்கம் செய்ய ஆட்கள் இல்லை. அதுதான் எல்லாவற்றுக்கும் பிரச்னையாக இருக்கிறது. இப்படி முக்கியமான பிரச்னைகளுக்கு மவுனம் காப்பது, அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பின்னவடைவுதான் தரும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/1ML5Jl4

Post a Comment

0 Comments