விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் 1 மணி அளவில், அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், நரிக்குடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குணசுந்தரிக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு குணசுந்தரியை அழைத்து செல்லுமாறு அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்த உறவினர்கள், ஆம்புலன்ஸ் வருகைக்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குணசுந்தரிக்கு உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் மதியம் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். குணசுந்தரியின் இழப்பு குறித்து அவரின் உறவினர்கள் பேசுகையில், "சமீபக்காலமாக நரிக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்க கூட மருத்துவர்கள் இல்லை. நரிக்குடியை சுற்றி கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
அந்த கிராமங்களில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் நரிக்குடி மருத்துவமனைதான் பெரிய ஆஸ்பத்திரி போன்றது. அப்படிப்பட்ட மருத்துவமனையில் உயிர் காப்பதற்கு உரிய வசதிகளும், மருத்துவர்களும் இல்லாதது வேதனை அளிக்கிறது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டப்பின் உரிய நேரத்தில் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படவேண்டிய குணசுந்தரி, சுமார் 1 மணிநேரம் ஆம்புலன்ஸூக்காக காத்துக்கிடந்தார். இந்நிலையில், அவரின் உயிரிழப்புக்கு பின்னர் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வந்ததாக தெரியவருகிறது.

உயிர் காக்கும் மருத்துவ அவசரத்துக்காகவே 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் சிதையும் வகையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இன்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை யார் வந்து ஈடுசெய்யப்போகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் யாருக்கேனும் அவசரமென்றால், 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதே அரிதிலும் அரிதாக இருக்கிறது. ஆகவே, தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களும், 108 ஆம்புலன்ஸ் சேவைகளையும் அதிகப்படுத்த அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி பேசுகையில், "அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கான மருந்துகளை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் மூலமாகவும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.பி.பி.எஸ்.தர நிலையிலான மருத்துவர்கள் மட்டுந்தான் பணியில் இருப்பார்கள். அவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உடம்பு முழுக்க விஷம் பரவாமல் இருக்க போதிய முதலுதவிகளை அளித்து மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.
பாம்புக்கடி விஷமுறிவுக்கான சிறப்பு மருத்துவம் அரசு மருத்துமனைகளிலேயே கிடைக்கும். அதுபோல் 108 ஆம்புலன்ஸ் சேவை என்பது தலைநகர் சென்னையிலிருந்து கண்ட்ரோல் எடுத்து செய்யக்கூடியது. மற்றபடி ஆம்புலன்ஸ் தேவைகளை கருத்தில்கொண்டு புதிதாக வாங்குவதென்பது மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அதிகாரத்திற்குட்பட்டது" என்றார்.
from India News https://ift.tt/Z1JXDig
0 Comments