விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி அருப்புக்கோட்டை. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், மில் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கான பேர் அருப்புக்கோட்டை நகராட்சியை மையப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக அருப்புக்கோட்டை நகராட்சியில் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னை பொதுமக்களை திண்டாட வைத்துள்ளது. தொடர்ந்து 25 நாள்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் அல்லல்படுவதாக பொதுமக்களில் சிலர் நம்மிடம் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முகமது ஜின்னா நம்மிடம் பேசுகையில், "அருப்புக்கோட்டை நகராட்சியின் குடிநீர் தேவைக்கு, வைகை கூட்டுக் குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய இரண்டிலும் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இதில், வைகை கூட்டுக் குடிநீர் திட்ட நீரானது திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பம்ப் செய்யப்பட்டு அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நீர், மாசு கலந்து கலங்கலாகவும், சுவையற்றும் இருப்பதால் வைகை நீரை பொதுமக்கள் விரும்புவதில்லை. எனவே, தாமிரபரணி நீருடன், வைகை நீரை கலந்தே நகராட்சி அதிகாரிகள் குடிநீர் சப்ளை செய்து வந்தனர்.
இதன் பின்னும் குடிநீர் சுவையற்றும், தரமற்றும் இருந்ததால் நகராட்சியின் பல இடங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதை கவனத்தில்கொண்டு நீரை சுத்திகரித்து சுத்தமான முறையில் குடிநீர் வழங்குவதைவிட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைகை கூட்டுக் குடிநீர் சப்ளையை அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்தினர். எனவே, ஒட்டுமொத்த நகராட்சிக்கும் தாமிரபரணி திட்டத்தின் மூலமாக மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணிகளால் நகராட்சியின் ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்படி ஒருபகுதிக்கு 25 நாள்கள் முதல் 1 மாதம் வரைக்கும் குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தினசரியும் தனியார் வாகனங்களில் கொண்டுவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர், ஒரு குடம் ரூ.12-க்கு வாங்கி நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலை இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கப்போகிறதென தெரியவில்லை. மக்களின் நிலையை புரிந்துகொண்டு நிலைமையை சரிசெய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
பெரியபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில், "நாங்கள் இருக்கும் முனியப்பன் கோயில் தெரு, பெரிய புளியம்பட்டி ஏரியாவுக்கு 25 நாள்களாகியும் இன்னமும் குடிநீர் சப்ளை இல்லை. இந்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று காலை, குழாயில் தண்ணீர் திறந்துவிட்டனர், 25 நாள்கள் கழித்து ஒருவழியாக தண்ணீர் வந்துவிட்டது என்ற பெருமூச்சில் தண்ணீர் பிடிப்பதற்கு தயாரானோம். ஆனால், தண்ணீர் கலங்கலாக குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இருப்பினும் எங்களுக்கு வேறு வழியில்லையே என்று எண்ணிக்கொண்டு காலி குடங்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் திடீரென தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டது.
சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே குழாயில் தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள். இப்படி செய்வதற்கு எதற்காக நாங்கள் தண்ணீர் வரி கட்ட வேண்டும்... குடிநீர் வரும் தகவலறிந்து கூலி வேலைக்கு சென்றவர்கள்கூட தங்களது ஒருநாள் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒருநாள் பிழைப்பு போயும், ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம், குடிமக்களுள் ஒருவராக நகராட்சி கமிஷனிரிடம் புகாராக சொல்லி ஆதங்கப்பட்டால், எங்களை அலட்சியப்படுத்திப் பேசுகிறார். மக்கள் சேவைக்காக பொறுப்புக்கு வந்தவர்கள், பொறுமையோடு மக்களை அணுகினால் அவர்களுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் பிரச்னை, எரிச்சலை ஏற்படுத்துமெனில் அவர்கள் எப்படி நல்ல அதிகாரியாகச் செயல்பட முடியும்" என்றார் கொதிப்புடன்.
மக்கள் பிரச்னை குறித்து நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமியிடம் கேட்டபோது, "அருப்புக்கோட்டை நகராட்சிக்கு ஒருநாளைக்கு 55 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இந்த தேவையை வைகை மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் நீர் பெற்று, சுழற்சி அடிப்படையில் சரியாக நகராட்சியின் 36 வார்டுகளுக்கும் விநியோகித்து வந்தோம். ஆனால், வைகை நீர் சுவையற்று இருப்பதாக தொடர் புகார்கள் வந்ததால், 3.8.2023 முதல் வைகை நீர் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எனவே, வைகை நீர் அல்லாமல் எஞ்சிய தாமிரபரணி நீரை மட்டும் 36 வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் வழங்கும்போது குடிநீர் சப்ளை 25 நாள்களுக்கும் அதிகமாவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, தேவையை கருத்தில்கொண்டு தற்காலிக தீர்வாக மீண்டும் வைகை நீரை பம்ப் செய்து குடிநீர் சப்ளைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் முதல் வாரம் தாமிரபரணி நீரும், மறுவாரம் வைகை குடிநீரும் வழங்குவதற்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அதேசமயம், வைகை நீரை பாத்திரம் கழுவுதல், துணி துவைப்பது, குளிப்பதற்கு என வீட்டு உபயோகத்துக்கு மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், குடிப்பதற்கு தாமிரபரணி நீரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் வழியாகவும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலங்கலாக வரும் வைகை குடிநீரை சுத்திகரித்து வழங்குவதற்கு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. அதன்படி, நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவும் இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அதேபோல அக்டோபர் முதல் வாரத்தில் புதிதாக தாமிரபரணி திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆகவே அதுவரை மக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.
அதிகாரிகள் தரப்பில் நகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டோம், ஆனால் நம்மிடம் பேசியவர், ``எதுவென்றாலும் நேரில்தான் பேசமுடியும், போனில் பேச முடியாது..." என ஆரம்பத்திலேயே தடை போட்டார். இருப்பினும், `மக்களின் அத்தியாவசியப் பிரச்னைக்காக சிறிது நேரம் ஒதுக்கி பேசலாமே!' என அவரிடத்தில் கோரிக்கையைச் சொல்லி முடிக்கும் முன்பாகவே, ``நான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. உங்களுக்கு பதில் வேணும்னா கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ஐ கேளுங்க, இல்ல சேர்மனை கேளுங்க, என்னையெல்லாம் கேட்காதீங்க" என ஆவேசமாகச் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/Ruyn3ZU
0 Comments