டெங்கு காய்ச்சலால் சிறுவன் இறப்பு; `சுகாதார சீர்கேட்டை சரிசெய்யாத திமுக அரசுக்கு கண்டனம்!' - இபிஎஸ்

சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி அய்யனார் - சோனியா. இவர்களுக்கு ரக்‌ஷன் என்ற நான்கு வயது மகன் இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ரக்‌ஷன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கிறார். இதனால், ரக்‌ஷனின் பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ரத்தப் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில், சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

டெங்கு

அதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காகக் கடந்த 6-ம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் ரக்‌ஷன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக, அவன் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் ரக்‌ஷன் கடந்த சில நாட்களாக டெங்குகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டைச் சரி செய்யாத இந்த விடியா தி.மு.க அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/kaNCvfh

Post a Comment

0 Comments