`ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார்' - உடனடி பதில் கொடுத்த ஏ.ஆர்.ஆர் தரப்பு! - பின்னணி?

`பட்ட காலிலே படும்' என்ற பழமொழியைப் போல அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது புதுப்புது புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, அவரின் `மறக்குமா நெஞ்சம்' இசை கச்சேரி பெரும் களேபரத்தில் முடிவடைந்து அதன் சூடு இன்னும் தணியாத நிலையில் தற்போது, `ரகுமான் பணம் மோசடி செய்துவிட்டார்' என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் திடீர் புகார் எழுப்பியிருக்கின்றனர்.

மறக்குமா நெஞ்சம்

களேபரமான மியூசிக் கன்சர்ட்:

கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்ய ராம் பேலஸ் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்' இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியைக் காண அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக, 25 ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, கிட்டத்தட்ட 50,000 பேர் கூடும் அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்துவிட்டதாகவும், போதுமான இருக்கைகள், ஸ்பீக்கர், குடிநீர், சுகாதாரம், பார்க்கிங் என எந்த வசதியும் செய்துகொடுக்கவில்லை என்றும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த கூட்டத்தால் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முதல்வரின் கான்வாய் வாகனமே சிக்கியதால் பெரும் விவாதப் பொருளாக மாறி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யும் நிலைக்குச் சென்றது.

அந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான், `அசாதாரணமான சூழ்நிலையால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் உங்கள் குறைகளுடன் உங்கள் டிக்கெட் நகலை மின்னஞ்சல் அனுப்பவும். மக்கள் விழித்துக்கொள்ள நானே பலியாடு ஆகிறேன்!' என்றெல்லாம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, தற்போது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான்

அடுத்த புகார் `பணமோசடி?'

இந்த நிலையில், `2018-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பித் தரவில்லை' என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்திருக்கும் புகார் கடிதத்தில், ``கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் ஆர்.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுக்கப்பட்டது. அந்த நிலையில், மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் மாநாடும், இசை நிகழ்ச்சியும் ரத்தானது. அப்போது, நிகழ்ச்சிக்காக ரகுமானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திரும்பப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

புகார் கடிதம்

அதற்கு ஏ.ஆர் ரகுமான் தரப்பிலும் முன்பணத்தை திரும்ப கொடுக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் முன் தேதியிட்ட காசோலை வழங்கப்பட்டது. ஆனால், அந்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது சமந்தப்பட்ட அந்த வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிய வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை ஏ.ஆர்.ரகுமான்னையும், அவரின் செயலாளர் செந்தில் வேலவனையும் தொடர்புகொண்டும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, முன் பணத்தை திருப்பித் தராத ஏ.ஆர். ரகுமான் மீதும், அவரின் செயலாளர் செந்தில் வேலவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப் புகார் மீது விசாரணை மெற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஆயத்தமாகிவருகின்றனர். உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது பண மோசடிப் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் பொதுவெளியில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் தரப்பின் பதிலடி:

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மீதான புகாருக்கு அவரின் செயலாளர் செந்தில் வேலவன் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், ``ASICON 2018 - CHENNAI' என்ற மூன்று நாள் நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் ரூ.25 லட்சமும், இதர கலை நிகழ்ச்சிக்காக ரூ.25 லட்சமும் என 2 காசோலைகளை அவர்கள் வழங்கினார்கள்.

செந்தில் வேலவன் மறுப்பு அறிக்கை

அப்போது நடந்த பேச்சுவார்த்தையிலும், அதைத்தொடர்ந்து போடப்பட்ட ஒப்பந்தத்திலும் `நீங்களாகவே நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது' என குறிப்பிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனை உள்பட அனைத்து விஷயங்களும் இணைக்கப்பட்டு அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சியை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு, அவர்கள் இந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.

ஏ.ஆா். ரஹ்மான்

அப்படி இருந்தபோதிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சியை ரத்து செய்த நிலையில், ஒப்பந்தத்தை கடந்தும் நட்பு ரீதியில் இரக்கப்பட்டு ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரகுமானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! இந்த நிலையில், தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் இந்தப் புகாரில் அவர் பெயரை இணைத்திருக்கின்றனர். ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்க தேவையில்லை. எங்கள் மீது கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும், அந்த சங்கம் மீது விரைவில் நாங்கள் வழக்குத் தொடர்வோம்!" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/Gw8Ir6g

Post a Comment

0 Comments