மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களுக்கு எந்த பலனும் கிட்டாததால், இறுதியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பக்கம் சென்றனர் எதிர்க்கட்சிகள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளில், மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று தொடங்கிய முதல்நாள் விவாதத்திலும் கலந்துகொள்ளவில்லை, இன்றும் அவைக்கு வரவில்லை.
இருப்பினும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாள் விவாதம் இன்று தொடங்கியதையடுத்து, பதவிநீக்கத்திலிருந்து மீண்டுவந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதலாவதாக உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி தனது உரையில், ``நான் மணிப்பூருக்குச் சென்றேன். ஆனால், பிரதமர் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை. பிரதமரைப் பொறுத்தவரை அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல. மணிப்பூரை இரண்டாகப் பிளவுபடுத்துவதுதான் அவர்களின் திட்டம். மணிப்பூரில் பாரத மாதாவை நீங்கள்(பாஜக) கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்" என்று கடுமையாகச் சாடினார். பின்னர் ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அவையிலிருந்து ராகுல் காந்தி கிளம்பிவிட்டார்.
ராகுலின் இத்தகைய பேச்சைக் கேட்டு கொதித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ``இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒருவர்(ராகுல் காந்தி) பாரத மாதா மரணம் பற்றிப் பேசுகிறார், காங்கிரஸ் தலைவர்களும் கைதட்டுகிறார்கள். நீங்கள் இந்தியா அல்ல. இந்தியா தகுதியை நம்புகிறது, வாரிசு அரசியலை அல்ல. ஊழல் இப்போது இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. வம்ச அரசியல் இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்று மத்திய அமைச்சர்கள் பலமுறை கூறினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் தான் அதிலிருந்து ஓடின. என்னைக் கண்டதும் அவர் (ராகுல் காந்தி) அவையிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் இப்போது ராஜஸ்தானுக்குச் செல்கிறார். அங்குதான் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர்கள் நீதி கேட்கவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். காஷ்மீரி பண்டிட் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஒரு திரைப்படத்தில் காட்டும்போது காங்கிரஸ் அதனைப் பிரசாரம் என்று கூறியது. இன்றைக்கு அதே கட்சியினர் தற்போது நியாயத்தைப் பற்றி பேசுகின்றனர். எனவே, மீண்டும் அங்கு பிரிவு 370 அமல்படுத்தப்படாது என்று அவர்களிடம் நான் கூற விரும்புகிறேன். மேலும் ராகுல் காந்திக்கு சீனாவுடன் மட்டுமே தொடர்பு இருக்கிறது, இந்தியாவுடன் அல்ல" என்றார்.
மேலும் பிரியங்கா காந்தி ராபர்ட் வதேராவிடன் அதானி இருக்கும் புகைப்படத்தை காட்டிய ஸ்மிரிதி இரானி, ``என்னிடமும் சில புகைப்படங்கள் இருக்கிறது. 1993-ல் முந்த்ரா துறைமுகத்தில் காங்கிரஸ் அதானிக்கு இடம் கொடுத்தது... UPA ஆட்சியின் போது அதானிக்கு 72,000 கோடி கடன் அளித்தது. காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மாநிலங்களில் துறைமுகப் பணிகள் அதானிக்கு வழங்கப்பட்டது ஏன்?" என காட்டமாக கேள்வி எழுப்பினார். முன்னதாக ராகுல் காந்தி கடந்த காலங்களில், மோடி - அதானி ஒன்றாக பயணம் செய்யும் புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டியது குறிப்பிடத்தக்கது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/rCDAhKt
0 Comments