பஞ்சாப்: `ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்வேன்'- ஆம் ஆத்மி அரசை எச்சரிக்கும் பன்வாரிலால் புரோஹித்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் சிங் தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில், நீண்டகாலமாக பஞ்சாப்பில் முதல்வர் - ஆளுநர் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் சிங்கப்பூருக்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

கெஜ்ரிவால் - பன்வாரிலால் புரோஹித் - பகவந்த் மான் -

அதற்கு முதல்வர் பகவந்த் மான், விளக்க கடிதம் அனுப்ப மறுப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட அரசு முடிவுசெய்தது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையைக் கூட்டுவதற்கான அனுமதி வழங்கவில்லை. அதனால், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

அமைச்சரவை முடிவின்படி சட்டசபையைக் கூட்ட வேண்டியது ஆளுநரின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் பல்கலைக்கழக வேந்தராக இனி மாநில முதல்வர் பதவி வகிக்க வகை செய்யும் சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியது. இப்படியாகத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் - ஆளுநர் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் பஞ்சாப் அரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அரசு தரப்பிலிருந்து உரியப் பதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``நான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதிலளிக்க வேண்டும். அப்படிப் பதிலளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்வேன். மேலும், எனது கடிதத்துக்கு பதிலளிக்காததின் மூலம் அரசமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்துக்கும் பதிலளிக்கவில்லை. எனவே, என் கடிதங்களுக்கு முறையாகப் பதில் அளிக்காவிடில் முதலமைச்சர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி ஆட்சிக்கும் பரிந்துரை செய்வேன்.

அரசியலமைப்பு நெறிமுறையின் தோல்வி குறித்து 356-வது பிரிவின்கீழ் இந்திய ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவது மற்றும் ஐ.பி.சி பிரிவு 124-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, எனக்குப் பதில் அனுப்ப வேண்டும். மேலும் மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் பதிலளிக்க வேண்டும். தவறினால் சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநரின் இந்தப் பேச்சு மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.



from India News https://ift.tt/O85xzc4

Post a Comment

0 Comments