தமிழரசி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
``அண்ணன் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. ஆளுநரா அல்லது ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற வித்தியாசம் தெரியாத அளவில்தான் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தின் நலனுக்காக, மக்களின் நலனுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா... மாறாக, வள்ளலார் - திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, சனாதனம், திராவிட எதிர்ப்பு என்று குதர்க்கமான கருத்துகளைப் பேசி, மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டால் கொடுப்பதில்லை. அதுவே, பா.ஜ.க உறுப்பினர்களும், சூதாட்ட முதலாளிகள் உள்ளிட்ட தேவையற்ற நபர்களும் ஆளுநரை சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. ஆளுநர் மாளிகையையே சதி ஆலோசனை மண்டமாக மாற்றிவிட்டார் ரவி. அரசு அனுப்பும் கோப்புகளையெல்லாம் மூட்டை கட்டி, பரண்மேல் போட்டுவிட்டு, ஊர் ஊராகச் சென்று சனாதனம் குறித்து வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார். சாமானியனுக்கு அது ஆளுநர் மாளிகையா, அலிபாபா குகையா அல்லது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கட்சி அலுவலகமா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன. திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில், ஆளுநரின் நயவஞ்சக எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது.’’
கார்த்தியாயினி, மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க
``இதை, அறிவாலயத்தின் மூடர் கூடம் சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தவறு செய்யும்போது, அதைக் கேள்வி கேட்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பதால், இந்தத் திறனில்லாத அரசுக்கு ஆளுநரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றன. இதனால் அவர்மீது கட்சி, மதச் சாயம் பூச முயல்கிறார்கள். ஆனால், தமிழக ஆளுநர் நடுநிலை தவறாமல் தன்னுடைய பணியைத் திறம்படச் செய்துகொண்டிருக்கிறார். மாற்றுக் கருத்துகள் வரும்போது அவற்றையும் கலந்தாலோசனை செய்து திருத்தம் செய்துகொள்கிறார். இந்த ஆட்சியில், ஒட்டுமொத்த மாநிலமும் மதுவால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. `திராவிட மாடல்’ என்ற பெயரில் `சாராய மாடல்’ ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. `சொந்தக் கட்சியிலேயே பாதுகாப்பு இல்லை’ என்று தி.மு.க பெண் உறுப்பினரே மேடையில் பேசுகிறார். தலைநகரில் பெண் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்படுகிறார். இப்படி சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக மணிப்பூர் விவகாரத்தை பூதாகரமாக்கிப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது ‘இலாகா இல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்’ என்ற அச்சத்தில் ஆளுநரைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள்.’’
from India News https://ift.tt/d8t7hLo
0 Comments