டெல்லி சிறப்பு சட்டம்: பாஜக பக்கம் சாய்ந்த ஆந்திரா, ஒடிசா... கள நிலவரம் என்ன?!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு, 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் கூட்டணிக்கு `I.N.D.I.A' எனப் பெயர் சூட்டியிருக்கின்றன. ஆளும் கூட்டணி டெல்லியிலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெங்களூரிலும் கூட்டம் நடத்தின. என்.டி.ஏ கூட்டணியில் 36 கட்சிகளும், `இந்தியா' கூட்டணியில் 26 கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், இந்த இரு கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பது தேர்தல் நேரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் I.N.D.I.A கூட்டணி

அதற்கு முன்னோட்டமாகவே டெல்லி சிறப்பு சட்டம் தொடர்பான சட்ட மசோதா ஆதரவு, எதிர்ப்பு விவகாரங்கள் கணிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களின் நீண்ட பட்டியல், முக்கியமானதாகக் கருதப்படுவது டெல்லி சிறப்புச் சட்டம். அதாவது, டெல்லி அரசின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.

இதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தில் இரு அவைகளிலும், பெரும் எதிர்ப்புக் கூச்சலுக்கு மத்தியில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்தச் மசோதாவை எதிர்த்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி வெற்றிபெற வேண்டுமானால், 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். தற்போதுவரை டெல்லி அவசரச் சட்டத்துக்கு எதிராக, 238 உறுப்பினர்களில் 105 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

ஜெகன்மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அசாதுதீன் ஒவைசி

கபில் சிபல் போன்ற சில சுயேட்சை எம்.பி-க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, தெலங்கானாவின் சந்திர சேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்.பி.க்களுக்கு டெல்லி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆந்திராவில் ஆட்சியிலிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, டெல்லி சிறப்புச் சட்டம், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்த இரண்டு விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு ஆதரவளிக்கும் என அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில், பா.ஜ.க மற்றும் NDA கூட்டணிக் கட்சிகளுக்கு 103 உறுப்பினர்கள் இருக்கின்றன. ஐந்து நியமன எம்.பி.க்கள், ஒரு சுயேச்சை எம்.பி-யின் ஆதரவு ஏற்கெனவே அரசுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கிடையில், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவால் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக 127 உறுப்பினர்களாக எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா, யோகி, மோடி

மேலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மாயாவதியின் பி.எஸ்.பி ஆகியவையும் டெல்லி மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தியப் பிறகே, முழு ஆதரவு, எதிர்ப்பு எண்ணிக்கைகள் வெளிவரும்.!



from India News https://ift.tt/3olC1xA

Post a Comment

0 Comments