தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பது தொடர்பாக, மின்வாரியத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டெண்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அதை ரத்து செய்திருக்கிறது மின் வாரியம். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கியது. அதன் முன்னோட்டமாக 1.10 லட்ச ஸ்மார்ட் மீட்டர்கள் தியாகராய நகரில் பொருத்தப்பட்டது. தற்போது இதை விரிவுப்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி தமிழகம் முழுவதிலும் மூன்று கட்டங்களாக நடைப்பெற திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டரும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது . அதைத் தற்போது ரத்து செய்துள்ளது மின்வாரியம். ரூ.10,790 கோடியில் பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர்கள் வேலை வரும் 2025-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டது.
இது குறித்து நம்மிடம் பேசிய உள் விவரம் அறிந்த சிலர், ”டெண்டருக்கு கொடுக்கப்பட்டிருந்த விதிமுறைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. டெண்டர் ரத்து செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக சில தகவல்கள் இணைக்கப்பட்டு மீண்டும் போடப்படும். இதில், 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மிட்டர் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளில் பல சந்தேகங்கள் இருந்ததால், யாரும் ஒப்பந்தம் கோர முன்வரவில்லை. கிட்டத்தட்ட 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதை முற்றிலும் களைந்து புதியதாக ஒரு ஒப்பந்தம் வெளியிடுவதற்குப் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுப் பெற்ற மின்வாரிய பொறியாளர் நீலகண்டன், ``ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் போடப்பட்டு 55 நாள்கள் ஆகிறது. இந்த 54 நாள்களில் ஒப்பந்ததாரர்கள் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட வாரியம் விளக்கமளிக்கவில்லை. மின் வாரியத்தால் போடப்படும் டெண்டருக்கு தொழில்நுட்பம் சார்ந்து கேள்விகள் கேட்கப்படுவது இயல்புதான். அதிலும், ஸ்மார்ட் மீட்டர் என்பது புதிய வகையான தொழில்நுட்பம். அதில் கேள்விகள் எழும், அதற்குரிய விளக்கங்களை அரசு தரவேண்டும்.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில்தான் இந்த டெண்டர் கொடுக்கப்பட்டது. சிறிய டெண்டர் என்றாலே, எல்லாம் முடிவு செய்யப்பட்டு டெண்டர் போடப்படும். இது கிட்டத்தட்ட 17,000 கோடி அளவிலான டெண்டர்... சாதாரணாமாக முடிக்க மாட்டார்கள். அதிலும் அந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கும்போது, அந்த டெண்டர் இறுதியாகாது. புதிய அமைச்சர் புதிய டெண்டர் போடுவார். அதன்பின் இறுதியாக வாய்ப்பிருக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டுவருவதில் தமிழக மாநிலம் ஒன்றும் முன்னோடி மாநிலம் அல்ல. அனைத்து மாநிலங்களிலும் இந்தப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், தமிழகத்தில் மட்டும் இது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தால், அவர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியிருப்பார். அது குறித்து எதாவது ஒரு விளக்கம் அளித்திருப்பார். ஆனால், துறை அதிகாரிகள் சந்திக்க மாட்டார்கள்.
இப்போது அதிகாரிகளால் முன்வைக்கப்படும் காரணம் உண்மையில்லை. இந்த இழுபறியால் தான் மூன்று முறை டெண்டர் நீட்டிக்கப்பட்டது . கடந்த 26-ம் தேதி டெண்டர் கேன்சல் செய்யப்பட்டது. ஆனால், ரத்து செய்யப்பட்ட தகவலே வெளியில் வரவில்லை. அதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை” என்றார்.
from India News https://ift.tt/rXwuKQZ
0 Comments