பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில்தான் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு 10-க்கும் மேற்பட்டவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்களையும் கொன்று குவித்தனர். அவரின் மூன்று வயதுக் குழந்தையைக் கல்லில் அடித்துக் கொன்றனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பில்கிஸ் பானுவின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆனால், அவர்களின் தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே குஜராத் மாநில அரசு சிறையிலிருந்து 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர்களை, மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் கௌரவித்தனர். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டது, வெறிச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மாலை, மரியாதை இந்திய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு மனுத்தாக்கல் செய்தார். மேலும், சிபிஐ(எம்) தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராகப் பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பில்கிஸ் பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா,"குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு நாடுமுழுவதும் போராட்டங்கள், எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. குற்றவாளிகள் விடுதலையில் செய்யப்பட்டதற்கு மக்களிடையே கோபம் இருக்கிறது. மேலும், குஜராத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாகம், குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து எதிர்மறையான கருத்தையே தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் யாரையும் முன்கூட்டியே விடுவிக்கப் பரிந்துரைக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான ராதேஷ்யாம் ஷா, "குஜராத் அரசின் 1992 நிவாரணக் கொள்கையின் கீழ் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு குஜராத் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகே உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். 2008-ல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அப்போது நடைமுறையிலிருந்த விதிகளின்படி, ஒரு குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைக்கு விண்ணப்பிக்கலாம்.15 வருடங்கள் மற்றும் 4 மாத சிறைவாசத்தை முடித்துவிட்ட எனது தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அதன் அடிப்படையில் விடுதலை சாத்தியமாகியிருக்கிறது" எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள்," நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்கள் போராடினாலும், குரல் கொடுத்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நீதிமன்றம் சட்டப்படி மட்டுமே செயல்படும். பொதுமக்களின் கோபத்தை பொருட்படுத்தமாட்டோம். நாங்கள் சட்டப்பூர்வ சமர்ப்பிப்புகளை மட்டுமே பரிசீலிப்போம். பொதுமக்களின் கூக்குரல் நீதித்துறை முடிவுகளை பாதிக்காது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அது தவறான தீர்ப்பு என்று அர்த்தமா?" என பில்கிஸ் பானு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதே நேரம், குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களையும், அவர்கள் சிறையிலிருந்தபோது அவர்களுக்கு அடிக்கடி வழங்கப்பட்ட பரோலையும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 9 (இன்று) விசாரணை தொடரும் எனத் தெரிவித்திருக்கிறது.
from India News https://ift.tt/YTlwWud
0 Comments