ED இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பணி நீட்டிப்பு விவகாரம்; மத்திய அரசு ‘அடம்பிடிப்பது’ ஏன்?!

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பா.ஜ.க அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்தக் குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் பிறகும், அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்க அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்கிறது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கே.மிஸ்ரா எனப்படும் சஞ்சய் குமார் மிஸ்ரா, 1984-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியாகத் தேர்வானவர். டெல்லியில் வருமான வரித்துறை தலைமை ஆணையராக இருந்த எஸ்.கே.மிஸ்ராவை, அமலாக்கத்துறை இயக்குநராக 2018-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு நியமித்தது. இவரது தலைமையில்தான், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எஸ்.கே.மிஸ்ரா

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார்கள்.

எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், அவருக்கு ஓராண்டு காலம் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பதவிநீட்டிப்புக்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘எஸ்.கே.மிஸ்ராவுக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

எஸ்.கே.மிஸ்ரா, அமித் ஷா

ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக, எஸ்.கே.மிஸ்ராவை அமலாக்கத்துறை இயக்குநராக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு நினைத்தது. எனவே, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சட்டத்திலும், டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்திலும் 2021-ம் ஆண்டு திருத்தங்களைக் கொண்டுவந்தனர். அதனடிப்படையில், எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இவரை விட்டால் இந்தப் பதவிக்கு வேறு ஆளே இல்லையா?” என்று மத்திய அரசிடம் கேட்டது.

கடைசியாக, எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும், ஜூலை 31-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை இயக்குநர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்னும் மூன்று நாள்களுக்கு மட்டுமே இயக்குநர் பதவியில் அவரால் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூலை 31-க்குள் அவர் பதவி விலக வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில், அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை மத்திய அரசு தற்போது தாக்கல் செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஜுலை 26-ம் தேதி ஆஜரானார். அப்போது, எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரும் மத்திய அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரினார். எஃப்.ஏ.டி.எஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் ஆய்வு நடைபெறவிருப்பதால், இந்த பதவி நீட்டிப்பு அவசியப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 12 பக்க மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் நோக்கர்கள், ‘எஸ்.கே.மிஸ்ராவுக்காக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு தூரம் கெஞ்சுகிறது. இன்னும் இரண்டரை மாதங்கள் பதவி நீட்டிப்பு கோருவதன் உண்மையான நோக்கம் என்ன?’ என்று கேட்கிறார்கள். தற்போது, வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. அவரது பதவிக்காலம் செப்டம்பர் 15-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதற்கு மேல் அவருக்கு மேலும் பதவிநீடிப்பு கோரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியிருக்கிறது.



from India News https://ift.tt/3z2AYtS

Post a Comment

0 Comments