பிரதமர் மோடி, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, உள்ளிட்ட தென்மாநிலங்களை ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் பிரதமர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், தெலங்கானா சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மத்திய அரசின் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி இன்று அந்த மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு வாரங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட் பலர் கலந்துகொண்டனர்.
அந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``தெலங்கானா மாநிலம், ஆந்திராவிலிருந்து பிரிந்து பிறந்த புதிய மாநிலமாக இருக்கலாம். ஆனால் இந்திய வரலாற்றில் தெலங்கானா மற்றும் அதன் மக்களின் பங்களிப்பு எப்போதும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. தேர்தலின்போது தெலங்கானா மக்களுக்கு தெலங்கானா அரசு பல வெற்று வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. மத்திய பா.ஜ.க அரசு தெலங்கானா கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக ரூ.12,000 கோடி வழங்குவதை உறுதிசெய்திருக்கிறது. இங்கு கிராம பஞ்சாயத்துகள் மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்துதான் பெரும்பாலான பணிகளைச் செய்து வருகின்றன.
தெலங்கானாவிலுள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துகள் பொருளாதார சிரமத்தை எதிர்கொள்வதால், தற்போது இந்த வாரிசு அரசைக் கவிழ்க்க கிராம பஞ்சாயத்துகள் முடிவுசெய்திருக்கின்றன. கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பணிகளுக்கு பா.ஜ.க அரசு அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பல்வேறு துறைகளில் தெலங்கானாவுக்கு பலனளித்து வருகின்றன. வாரிசு கட்சிகளின் அடித்தளமே ஊழல்தான். அதற்கு சரியான உதாரணம் காங்கிரஸ்.
காங்கிரஸ் செய்த ஊழல் நாடறிந்தது. அதேபோலதான் கே.சி.ஆர் அரசும் ஊழல் செய்யாத திட்டங்களே எதுவுமே தெலங்கானாவில் இல்லை" எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடி தெலங்கானா வரும்போதெல்லாம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை புறக்கணித்திருக்கிறார். கடந்த இரண்டு முறையைப்போலவே தற்போது நடக்கும் அரசு விழாவிலும் தெலங்கானா முதல்வர் கலந்துகொள்ளவில்லை.
from India News https://ift.tt/FGoCiWs
0 Comments