உம்மன் சாண்டி குறித்து சர்ச்சை கருத்து... நடிகர் விநாயகன் மீது வழக்கு; வீடு உடைப்பு - நடந்தது என்ன?

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த 18-ம் தேதி காலமானார். அவரின் இறுதி சடங்கு நேற்று கோட்டயம் புதுப்பள்ளி சர்ச்சில் இரவு நடைபெற்றது. மக்களின் மனதை கவர்ந்த தலைவர் என அவருக்கு பலரும் புகழாரம் சூட்டியிருக்கின்றனர். அவர் மறைந்த அன்று கேரளா மாநிலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டது.

கேரள தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. மேலும் ஒரு வாரம் துக்கதினம் அனுசரிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி உம்மன் சாண்டி குறித்து அவதூறாக சில கருத்துக்களை பேசி உள்ளதாக குற்றச்சட்டு எழுந்தது.

அந்த வீடியோவில் பேசிய விநாயகன், ``யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். என்னுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை விடுகின்றனர். அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன்" என கூறியிருந்தார்

விநாயகனின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த வீடியோ பதிவை அவர் முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இதற்கிடையே கொச்சியில் உள்ள அவரின் வீட்டின் ஜன்னல் உள்ளிட்டவைகளை சிலர் கம்பியால் அடித்து உடைத்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் விநாயகன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட நடிகர் விநாயகனின் வீடு

எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜித் அமீர் என்பவர் கொச்சி அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விநாயகனுக்கு எதிராக அளித்துள்ள புகாரில், "உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசிய நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் கடத்தல் கும்பல் மற்றும் ரெளடிகளுடனான விநாயகனின் தொடர்புகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும்" என புகாரில் கூறியிருந்தார்.

உணர்வை புண்படுத்துதல், இறந்தவரை அவமரியாதை செய்தது, பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தனது வீட்டில் தாக்குதல் நடத்தியது குறித்து விநாயகன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க உம்மன் சாண்டி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக அரசு ஊழியர் ஒருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உம்மன் சாண்டி குறித்த்து வீடியோவில் பேசிய விநாயகன்

உம்மன் சாண்டிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருவாய்த்துறை ஊழியர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவில் பின்னூட்டமாக அவதூறான கருத்தை பதிவிட்டதாக பத்தனம்திட்டா டிவிஷன் பொதுப்பணித்துறை அக்கவுன்ட் ஆப்பீசரான ராஜேஷ்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார் தலைமறைவாக உள்ளார்.



from India News https://ift.tt/ToSUcp3

Post a Comment

0 Comments