நாகர்கோவில் நாகராஜா திடலில் பா.ஜ.க சார்பில் கடந்த இரண்டாம் தேதி நடந்த `குமரி சங்கமம்' என்ற மத்திய அரசின் ஒன்பதாண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நாகராஜா திடலின் கடைசிப் பகுதியில் இருந்தவர்களுக்கு அண்ணாமலை பேசியது கேட்கவில்லை என புகார் எழுந்தது. உடனே போடியத்தில் இருந்த மைக் மாற்றி வேறு மைக் பொருத்தப்பட்டது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியில் கடைசிவரை ஒலிபெருக்கி சரியில்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்களுக்கு அண்ணாமலை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புதிய புகார் எழுந்திருக்கிறது. நிகழ்ச்சி நடந்த நாகராஜா திடல் பகுதி 24-வது வார்டில் வருகிறது. 24-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ரோஸிட்டா கிழக்கு மண்டல மகளிர் அணி துணைத் தலைவராகவும் உள்ளார். ரோஸிட்டாவின் கணவர் திருமால், அதே கிழக்கு மண்டலத்தின் பொருளாளராக உள்ளார். இவர்கள் ஏற்பாட்டில் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர மாலை, மலர் கிரீடம், மலரில் செய்யப்பட்ட செங்கோல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அண்ணாமலைக்கு ஆளுயர மாலை அணிவிக்க அனுமதி இல்லை எனக் கூறி மறுத்திருக்கிறார்கள்.
மேலும், நிகழ்ச்சி நடக்கும் வார்டு கவுன்சிலரான ரோஸிட்டாவை மேடைக்கு அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ரோஸிட்டா, திருமால் ஆகியோர் அண்ணாமலைக்கு வாங்கி வைத்திருந்த ஆளுயர மலர் மாலையை, சில பா.ஜ.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்திருக்கின்றனர். இது பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரோஸிட்டாவும், அவருடைய கணவர் திருமாலும் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து, தலைமைக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி திருமாலிடம் நாம் பேசினோம். ``பாதுகாப்பு கருதி மாலை அணிவிக்க விடவில்லை எனக்கூறியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் யாரெல்லாமோ மேடையில் இருந்தபோது, அந்தப் பகுதியின் கவுன்சிலரை மேடையில் ஏற அனுமதிக்காததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நானும், என்னுடைய மனைவி ரோஸிட்டாவும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம். வேறு கட்சிக்குப் போகும் எண்ணம் இல்லை. பதவி இல்லாமல் பா.ஜ.க-வில் தொடருவோம்" என்றார்.
இதுபற்றி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜிடம் பேசினோம். "சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் அந்த நிகழ்வு நடந்திருப்பதாக அறிகிறேன். அவர்களிடம் பேசி வருகிறேன்" என்றார் சுருக்கமாக.
from India News https://ift.tt/wauY3EQ
0 Comments