உயர் நீதிமன்ற சுற்றறிக்கை; ``அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டுமென்ற உள்நோக்கம்!" - திருமாவளவன் கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் உயிர் நீத்த நினைவுதினத்தை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நெல்லை தாமிரபரணி நதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தமிழகம் முழுதும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாகத்தான் உள்ளது. அரசு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாயை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையிலும், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதற்கு தடையணை பெற்றுள்ளனர்.

மாஞ்சோலை

இந்த வழக்கை தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டத்தை மத்திய, மாநில பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்கள்மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். இந்த விவகாரத்திற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். உலக அளவில் இந்தியா தலைகுனிந்து நிற்கும் நிலை மணிப்பூர் வன்முறையால் ஏற்பட்டுள்ளது.

பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டக் கொடுமை நடந்து இரண்டு மாதங்கள் ஆகியும், பா.ஜ.க அரசு இந்தச் சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுகாதது அதிர்ச்சியளிக்கிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கைக் கைதுசெய்து குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும். மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வி.சி.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் பங்கேற்பார்.

திருமாவளவன்

நாளைய தினம் இதே சம்பவத்தை கண்டித்து மதுரையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் காந்தி, திருவள்ளுவர் உருவப்படங்கள் அல்லது சிலை தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைத்தவர் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதன் காரணமாக அம்பேத்கர் படம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் சமூகப் பதற்றம், அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் என்.ஐ.ஏ சோதனை என்ற முறையை பா.ஜ.க கையாண்டு வருகிறது. இன்றுகூட நெல்லையில் எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் இல்லத்தில் என்.ஐ.ஏ சோதனையை நடத்தி அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். என்.ஐ.ஏ அமைப்பை ஏவி சோதனை என்ற பெயரால் பதற்றத்தை ஏற்படுத்துவதால் தமிழகம் பயங்கரவாதிகளுடன் இணக்கமாக இருப்பதைப்போல் காட்டுவதற்கே பா.ஜ.க என்.ஐ.ஏ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பங்கு முக்கியமாக இருப்பதால், பிரதமர் தமிழக முதல்வரின்மீது மிகவும் கோபத்தில் உள்ளார். இந்தியா என்ற கூட்டமைப்பு அமைவதற்கு ஸ்டாலின் மிக முக்கிய காரணம். பிரதமர் சமீபகாலமாக நிகழ்த்தும் உரைகளில் தி.மு.க தலைவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து பேசி வருகிறார். பா.ஜ.க, தி.மு.க-வைக் கண்டித்து நடத்தும் போராட்டம் வேடிக்கையாக உள்ளது. மணிப்பூர் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கிலும், இந்தியா கூட்டணி வலுப்பெற்றிடக் கூடாது என்ற பதற்றத்திலும், பா.ஜ.க போராட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது" என்றார்.



from India News https://ift.tt/U4fVDSw

Post a Comment

0 Comments