மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் தலைமையில் உடைந்திருக்கிறது. அஜித் பவார் தலைமையில் 9 பேர் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க.கூட்டணி அரசில் சேர்ந்திருக்கின்றனர். இவர்கள் அமைச்சரவையில் சேர்ந்திருப்பதால் சிவசேனாவில் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஒரு முறை அமைச்சரவையை விரிவுபடுத்தி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி கொடுக்க முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் முடிவு செய்திருக்கின்றனர்.
தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக நேற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/81bd7bea-6422-4683-941d-4b9dd88d3312/Jayant_Patil_a_d.webp)
ஆனால் அஜித் பவார் கூட்டிய கூட்டத்தில் 32 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள் என மொத்தம் 40 பேர் கையெழுத்திட்டு தேர்தல் கமிஷனில் கொடுத்து தங்களுக்கு கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று அஜித் பவார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கடந்த 30-ம் தேதியே சரத் பவாரை நீக்கிவிட்டு அஜித் பவார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாகவும் தேர்தல் கமிஷனில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேசமயம் சரத் பவார் அணியும் தங்களுக்கு 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர். இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்திருக்கும் பேட்டியில், ``19 எம்.எல்.ஏ.க்கள் அபிடவிட்டில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
மேலும் 6 பேர் சரத் பவாரிடம் போன் மூலமாக தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இருக்கின்றனர். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அஜித் பவார் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததாக அஜித் பவார் கூறுகிறார். இவை ரகசியமாக நடந்திருக்கிறது. தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு ஏன் அதனை வெளியில் கூறாமல் அமைதி காத்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/08accf97-2260-411f-a4a9-8a6700326e68/PTI07_02_2023_000104B_33290115_d.webp)
எங்கு கூட்டம் நடந்தது என்பது குறித்தும், எத்தனை பேர் அதில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் கூறவேண்டும்'' என்றார். முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதால் சரத் பவார் மீண்டும் புதிதாக கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக இன்று முதல் மகாராஷ்டிரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது விசாரணை நடத்த சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஒரிரு நாளில் 16 பேருக்கும் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
from India News https://ift.tt/0XJK695
0 Comments