இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாமல் போனதும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கப்போகிறார் என்ற தகவலும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
இருப்பினும், திறப்பு விழா திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து, செங்கோலை மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே நிறுவினார்.
இந்த நிலையில் மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்க்கிறார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய, ``புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சம்ஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை.
நாடாளுமன்றம் பா.ஜ.க அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியிருக்கின்றனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்?
அரசமைப்புச் சட்டத்துக்குரிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை... கட்டடத்தின் நடுவில் சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாடபுத்தகங்களிலிருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும்.
அரசமைப்புச் சட்ட வரைவுக்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களிலிருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிரானவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
சாவர்க்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு, சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/t7v9TmO
0 Comments