Aavin: நிர்வாக கோளாறு முதல் அமுல் வரை... ஆபத்தில் ஆவின்?! - என்ன தான் பிரச்னை?!

தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதாரத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியப் பங்குவகிப்பது பால் உற்பத்தி. விவசாயம் கையைச் சுடுகிறபோதெல்லாம் விவசாயிகளைக் காப்பாற்றுவது கறவை மாடுகளே. இந்தப் பின்னணியில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, நுகர்வோருக்குத் தரமான பால் பொருள்களைத் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்வது ஆகிய உயரிய நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஆவின் நிறுவனம், இன்று பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், 12,000க்கும் மேற்பட்ட பால் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்கள் இருந்த நிலையில், அது தற்போது 9,673-ஆகக் குறைந்துவிட்டன. பால் கொள்முதலோ நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் என்ற நிலையிலிருந்து சுமார் 30 லட்சம் லிட்டர் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

ஆவின் பால்

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆவின் பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் மூன்றாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஆவின் தொடர்பாக அறிவிக்கப்பட்ட அல்லது வாக்குறுதி அளிக்கப்பட்ட எதுவுமே நிறைவேற்றப்படவில்லை போன்ற காரணங்களே முதன்மையானதாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்கள் பால் முகவர்கள் பலர்.

இது தொடர்பாக விளக்கமாக பேசியவர்கள், “குஜராத் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபட்டால் ஆவின் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் கொள்முதலை அமுல் தொடங்கவில்லை. இருப்பினும் ஏற்கெனவே ஆவின் நிறுவனம் சரிவை நோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கிறது; இது குறித்து விவாதிப்பது அவசியம்” என்கிறார்கள்.

அதோடு, “தமிழ்நாடு அரசு 2022 நவம்பர் 3 அன்று, பால் லிட்டர் ஒன்றுக்குக் கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி அறிவித்தது. இதனால் தற்போது பசும்பால் ரூ.35, எருமைப்பால் ரூ.44 என்று உள்ளது. 8.3% கொழுப்பு அல்லாத இதரச் சத்துக்கள், 4.2% கொழுப்புச் சத்து என இருந்தால்தான் இந்த விலை கிடைக்கும்.

ஆவின்

ஆனால், எந்தவொரு உற்பத்தியாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள விலை தற்போது கிடைப்பதில்லை. உற்பத்தியாளர்களுக்கு வாரந்தோறும் பால் பணம் வழங்கப்படாமல் பல ஒன்றியங்களில் இரண்டு மாதம்வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள், உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குப் பால் சத்து அளவு குறித்துச் செய்தி அனுப்புகின்றன. வாரம்தோறும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கூடுதல் விலை கிடைப்பது போன்ற காரணங்களால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்குப் பதிலாகத் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றனர் என்பதே உண்மை. ஆவின் நிறுவனம் மூடப்பட்டால் தனியார் வைத்ததுதான் சட்டமாகும்; அவர்கள் கொடுப்பதுதான் விலை என்ற நிலை ஏற்படும். எனவே, ஆவின் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பால் உற்பத்தியாளர்களின் முக்கியக் கோரிக்கை.

ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலைக் கொள்முதல் செய்யும் வகையில் அதன் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதன் நிர்வாகத்தில் உள்ள ஊழல், முறைகேடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். கூடுதல் ஊதியம் பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மேலும், ஆவின் கடைகளில் ஆவின் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்குவது, வாரந்தோறும் உற்பத்தியாளர்களுக்குப் பணம் கிடைக்கச் செய்வது, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, தீவனத்தை 50% மானிய வகையில், தேவையான அளவு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள இத்துறையில், கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்பதைத் தவிர, அதனால் பெரும் பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும், அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் நடைமுறைப் பிரச்னைகளை அரசு முதலில் கவனம் கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

இது தொடர்பாக பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தான் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம் ஆகும். ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது; அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருந்த நிலையில், மீண்டும் ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

அமுல் நிறுவனத்தின் வருகையும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை உயர்வும் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதித்திருக்கின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இந்த பாதிப்புகளை போக்கி, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு கொள்முதல் விலையை உயர்த்துவது மட்டும் தான் ஒரே தீர்வு. இதை செய்யாவிட்டால் நாளுக்கு நாள் ஆவின் பால் கொள்முதல் மோசமடைவதை தவிர்க்க முடியாது.

ஆவின் நிறுவன சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். மற்றொருபுறம் ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50% அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

பொன்னுசாமி

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, “பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர், நிர்வாக இயக்குநராக இருந்த சுப்பையன் ஆகியோரது காலத்தில் சீர்குலைந்து போன பால் கொள்முதல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இன்னும் சரி செய்யப்படாததால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் மீண்டும், மீண்டும் காலதாமதம், தட்டுப்பாடு ஏற்பட்டு பால் முகவர்கள் சொல்லெனா துயருக்கு ஆளாகி வருகின்றனர்” என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

மேலும் தொடர்ந்தவர், “புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் , நிர்வாக இயக்குனர் வினீத் ஆவினில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைந்து ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு, தாமதம் ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததாலும் கூட, ஆவினில் பணியாற்றும் கறுப்பு ஆடுகளால் பால் முகவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அரசுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர், நிர்வாக இயக்குநர் இந்த பிரச்னையை தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையை முன்வைக்கிறார்.

அமைச்சர் மனோதங்கராஜ்

நேற்று (ஜூன் 1) கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கமளித்துள்ளார்.



from India News https://ift.tt/jZGcF7V

Post a Comment

0 Comments