Maamannan: ``உதயநிதிக்கு இதைவிட முக்கியமான பொறுப்பு இருக்கிறது” - சபரீசன் சூசகமா?!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது. `இதுவே எனது கடைசிப்படம்’ என உதயநிதி குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகனான சபரீசனும் பங்கேற்றார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், ’என்ன சொல்லவருகிறார்’ என்ற எதிர்பார்ப்புகளையும் கிளப்பியிருக்கிறது.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சபரீசன், ``உதயநிதியின் கடைசிப்படம் இதுதான். அதைவிட முக்கியமான பொறுப்பு அவரிடம் இருக்கிறது. அதை அவர் சிறப்பாகச் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனி அவர் நடிக்க மாட்டார். நடிக்க வேண்டாம்” என அழுத்தமாகத் தெரிவித்தார். இசை வெளியீட்டு விழா மேடையில் தோன்றிய நட்சத்திரங்கள் பலர் அவர் தொடர்ச்சியாக நடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நேரெதிராக சபரீசன் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

Maamannan Audio Launch: உதயநிதி

கிட்டத்தட்ட துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டுகொண்டிருக்கிறார் என்றும், அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கருத்தும் கட்சி வட்டாரத்தில் எழுந்துவரும் நிலையில், தற்போது ’உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது’ என்கிறாரே சபரீசன்... ஒருவேளை இவரும் துணை முதலமைச்சர் பொறுப்பைத்தான் சொல்கிறாரோ எனக் கிசுகிசுப்புகள் எழுந்த நிலையில் இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம்...

”உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளே இனி எந்தப் புதிய படங்களில் நடிக்கப்போவதில்லை என உறுதிப்படுத்திவிட்டார்.

ஏற்கெனவே கையெழுத்தான, `மாமன்னன்’ திரைப்படத்தை தற்போது முடித்திருக்கிறார். அமைச்சராக இருப்பதால் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கக்கூடும். அந்த நிலையில் படப்பிடிப்பு எனக் கிளம்பினால் தேவையற்ற சர்ச்சைகள்தான் கிளம்பும். ஆகவே, படங்களில் நடக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

பிரசாரத்தில் உதயநிதி

குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது உதயநிதியின் தேர்தல் பிரசாரம் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரின் `செங்கல்’ பிரசாரம் பெரும் வெற்றிகண்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் வரவிருப்பதால் பல இடங்களுக்கு உதயநிதி சென்று பிரசாரம் செய்வதற்குக் கட்சியினர் விருப்பம் தெரிவிப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறையின் பணிகள், இளைஞரணியைக் கையாளும் பொறுப்பு, உறுப்பினர் சேர்க்கை எனப் பல்வேறு பொறுப்புகள் அவருக்கு இருக்கின்றன. தீவிர அரசியலில் ஈடுபட வேண்டியதையே சபரீசன் `அதைவிட முக்கியமான பொறுப்பு அவரிடம் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, வேறு எதுவும் சபரீசனின் பேச்சில் இல்லை’’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.



from India News https://ift.tt/M6nACrF

Post a Comment

0 Comments