திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் 53 ஆண்டுகளுக்கு முன் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராடி, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் நினைவு ஸ்தூபியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஜூலை 9-ஆம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட உள்ள நடைபயணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அந்த அறிக்கையில், கள்ளுக் கடைகளுக்கான ஆதரவு, அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், பனைமரம் மற்றும் தென்னை மரங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய வழிமுறைகள் இடம்பெற உள்ளது.
புதுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய பொய்யை மக்கள் ஏற்க தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்காக நன்றி சொல்ல வேண்டுமென்றால் அது பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டும்தான் நன்றி சொல்லி ஆக வேண்டும். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதமரை நேரில் அழைத்து வந்து சிறப்பு செய்ய உள்ளோம். அமைச்சர் எ.வ.வேலு பீகாரில் இருந்து எல்லாரும் பிழைப்பு தேடி தமிழகம் வருவதாகவும், அதுபோல தான் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்திருப்பதாக கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். ஆனால், கலைஞர் கோட்டத்தை திறக்க மட்டும் பீகார் முதல்வர் தேவைப்படுகிறாரா?
பொன்முடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ளார். இன்னும் ஓராண்டுக்குள் தமிழக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடிய நிலை ஏற்படும். முதல்வர் மீதும் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளோம். நாம் தமிழர், கட்சியும் பாஜகவும் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருந்தாலும் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர ஒரே கோட்டில் பயணிக்கிறோம்” என்றார்.
அண்ணாமலை வருவதற்கு முன்பாக அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் மற்றும் ஒலிபெருக்கிக்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்ததாகவும், பாஜகவினரை போலீஸார் தரக்குறைவாக பேசியதாகவும் கூறி, கோவை ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
from India News https://ift.tt/xDBa4JN
0 Comments