காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார் தந்தை பெரியார். அவர் 1944-ம் ஆண்டு உருவாக்கிய திராவிடர் கழகத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்கள் உருவாகினார்கள். பிறகு 1949-ம் ஆண்டு அறிஞர் அண்ணா பெரும் சிந்தனையாளராக திராவிட முன்னனேற்றக் கழகத்தை தோற்றுவித்தார்.
1969-ம் ஆண்டு அவர் மறைந்த பிறகு தி.மு.க-வை வழிநடத்தும் பொறுப்பு கலைஞர் கருணாநிதிக்கு வந்தது. கலைஞர் 62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி, 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் பொதுமக்களின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். இதில் மிக முக்கியமானதாக உழவர் சந்தை திட்டம் இருக்கிறது.
கடந்த 1999-ம் ஆண்டுக்கு முன்பு வரை இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி கொள்ளை லாபத்துக்கு வெளியில் விற்பனை செய்து வந்தார்கள் வியாபாரிகள். இதனால் உரிய லாபம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்தனர்.
மேலும் பொதுமக்களும் அதிக விலைக்கு காய்கறிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது அப்போது முதல்வராக இருந்த முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து அவர் எண்ணத்தில் உதித்ததுதான் உழவர் சந்தை திட்டம். இதையடுத்து 1999-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி உழவர் சந்தை திட்டத்தை அறிவித்தார்.
இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருள்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்ய முடியும். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இது விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இதற்கு பிற இடங்களைவிட இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதே காரணமாகும். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக சென்னை பல்லாவரத்தில் 100-வது உழவர் சந்தையை கலைஞர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.
விவசாயிகள் மேலும் பயன் பெரும் வகையில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் கலைஞர் கருணாநிதி. அதன்படி உழவர் சந்தை தினமும் செயல்பட தொடங்கும்போதும், நிறைவடையும் போதும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் உழவர்கள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு அரசுப் பேருந்துகளில் சுமைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு பிரத்யேகமான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுவும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேறப்பை ஏற்படுத்தியது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு சந்தைக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு கீழ் 4 முதல் 10 ஊழியர்களுடைய கண்காணிப்பில் சந்தைகள் செயல்படுகின்றன. தற்போது வரை சிறு, குறு விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள் நிலையான வருவாய் கொடுக்கிறது. ஒவ்வொரு உழவர் சந்தையிலும் குறைந்தபட்சம் 25 டன் முதல் 150 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின்றன.
மேலும் நாடாளுமன்றத்தில், "நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து காய்கறிகள் வாங்குவது குறையும்" என தி.மு.க வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இதற்கு மத்திய அரசு விரைந்து செவி சாய்க்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதேபோல் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் உழவர் சந்தையையும் பெயரளவுக்கு இல்லாமல், முறையாகச் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
from India News https://ift.tt/Xancvmw
0 Comments