மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பதவி ஏற்று இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. கடந்த ஆண்டு இதே தினத்தில்தான் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை இரண்டாக உடைத்து 50 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியில் வந்து பா.ஜ.க.வுடன் இணைந்து முதல்வராக பதவியேற்றார். ஆனால் அரசு பதவியேற்றதில் இருந்து 20 அமைச்சர்களுடன் தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவேண்டும் என்று சிவசேனாவில் இருந்து வெளியில் வந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் ஷிண்டேயிக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் பா.ஜ.க.தலைமை அதற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டுமானால் சிவசேனாவில் உள்ள நான்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பா.ஜ.க.தலைமை ஷிண்டேயிக்கு நெருக்கடி கொடுத்தது எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு ஷிண்டே சம்மதிக்கவில்லை. அப்படி நான்கு பேரை பதவி நீக்கம் செய்தால் கட்சிக்குள் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படும் என்று ஷிண்டே பயப்படுகிறார். இதனால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நேற்று அதிகாலையில் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு பண்டர்பூரில் உள்ள வித்தல் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட ஏக்நாத் ஷிண்டே, உடனே மும்பைக்கு வந்தார். எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் நேற்று மாலை முதல்வர் ஷிண்டே டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் இரவில் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அனுமதி கேட்டுக்கொண்டார். முக்கியமாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நான்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யாமல் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதோடு மத்திய அமைச்சரவையில் சிவசேனாவிற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்றும் ஷிண்டே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் சிவசேனாவை தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் குறையும் என்று ஷிண்டே நினைக்கிறார். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் டெல்லி சென்று இது குறித்து பேசி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிகளுக்கு தேர்தல் வருவதால் அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் ஷிண்டே இருக்கிறார்.
from India News https://ift.tt/hSfcDYX
0 Comments