சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு; டிஜிபி-யிடம் விசாரணை அறிக்கை - பின்னணி என்ன?!

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு துணை கமிஷனராக இடமாற்றப்பட்டிருந்தார் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி. அதிரடிக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போன அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, தினமும் உடற்பயிற்சிகளை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராம். சென்னைக்கு வந்தவர், இங்கும் சர்ச்சையில் சிக்கினார். அதனால் கொங்கு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கொங்கு மண்டலத்தில் பவர்ஃபுல் பதவியில் பணியமர்த்தப்பட்ட அவர் மீது, பாலியல் சர்ச்சை கிளம்பியது. அதுதொடர்பாக ரிப்போர்ட் கொடுத்தார் அவருக்கு மேலதிகாரியான மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்.

போலீஸ்

இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி, சென்னைக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு டம்மி பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில்தான் சமூகவலைதளம் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக்கூறி ஏமாற்றியதாகவும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், இளம் ஐ.பி.எஸ் அதிகாரி மீது டி.ஜி.பி-க்கு மெயிலில் புகாரளித்தார். அதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸாரை விசாரணை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை டி.ஜி.பி-க்கு அனுப்பி வைத்தது. அந்த ரிப்போர்ட்டில், இளம் ஐ.பி.எஸ் அதிகமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சார்ஜ் மெமோ டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி, மத்திய தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதற்கு பதில் அளிக்க சி.பி.சி.ஐ.டி மற்றும் டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துதான் சர்ச்சைக்குரிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் சி.பி.சி.ஐ.டி ரிப்போர்ட் அவரின் பிறந்தநாளன்று வெளியானது. அதன்பின்னணியில் கொங்கு மண்டலத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

போலீஸ் - புகார்

அதனால் இளம் ஐ,பி,எஸ் அதிகாரியும் அவரின் தரப்பும் அதிர்ச்சியடைந்தனர். பிறந்தநாள் கிஃப்ட்டாக இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் எதிர் தரப்பு அந்த தகவல்களை வெளியிட்டு வந்தனர். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள இளம் ஐ.பி.எஸ் அதிகாரி தரப்பு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து இளம் ஐ.பி.எஸ் தரப்பினரிடம் பேசினோம். ``பாலியல் மற்றும் மிரட்டல் புகாரளித்த சென்னைப் பெண் மீது ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவி கர்நாடக மாநிலத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் அந்தப் பெண் மற்றும் அவரின் தரப்பினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பெண் மற்றும் அவரின் தரப்பினர் தலைமறைவாக உள்ளனர். அந்தப் பெண் தரப்பு, ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பணம் கேட்டு பேரம் நடத்தியிருக்கிறது. அதன்பிறகே பெண் தரப்பு டி.ஜி.பி-க்கு புகாரளித்தது. ஐ.பி.எஸ் அதிகாரியைப் பிடிக்காதவர்கள்தான் புகாரளித்த பெண்ணின் பின்னணியில் இருக்கிறார்கள்'' என்றனர்.

போலீஸ்

பெண் தரப்பினரிடம் கேட்டதற்கு, ``ஐ.பி.எஸ் அதிகாரி மீது நாங்கள் கொடுத்த புகாருக்கு தேவையான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண், புகாரளித்தால் அதை திசை திருப்பும் நோக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி தரப்பு என் மீதும் எனக்கு உதவியவர்கள் மீதும் தேவையில்லாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்றனர். விரைவில் அந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி சட்டப்படி தண்டிக்கப்படுவார்'' என்றனர்.

டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கு முன் அவர் அளிக்கும் விளக்கத்துக்காக காத்திருக்கிறோம். இந்த பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால் மேற்கொண்டு பேச முடியாது" என்றார்



from India News https://ift.tt/n4VKo0b

Post a Comment

0 Comments