திருப்பூர் துரைசாமியின் கடிதம், விலகல், பல்வேறு உட்கட்சிப்பூசல்களுக்கு நடுவே ம.தி.மு.க-வின் தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்திருக்கிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோவும், முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவிக்கு துரை வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். ஆனால், ஆரம்பகாலம் தொட்டே வைகோவுடன் பயணிக்கும், ம.தி.மு.க-வின் ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, தான் ஏற்கெனவே வகித்துவந்த பொருளாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் 2022 மார்ச் மாதம் தொடங்கியது. ம.தி.மு.க-வின் 65 மாவட்ட அமைப்புகளுக்குக் கிளைக் கழகம் முதல் ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களின் நிர்வாக அமைப்புக்குத் தேர்தல் நடைபெற்றது. பின்னர் 61 மாவட்டக் கழகங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தல்கள் கடந்த மே மாத இறுதியுடன் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் சென்னை எழும்பூரிலுள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில், பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா உள்ளிட்ட ஐந்து பேரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஏழு பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆறு பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். குறிப்பாக, முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவிக்கு துரை வைகோ வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இது தவிர, முன்பு ம.தி.மு.க அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜுனராஜ் மனுத்தாக்கல் செய்தார். மேலும், கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு தொகுதியின் எம்.பி-யுமான கணேசமூர்த்தி வசமிருந்த பொருளாளர் பதவிக்கு, செந்திலதிபன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். கணேசமூர்த்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், கணேசமூர்த்தி கட்சியில் துரை வைகோ வருவதை விரும்பவில்லை என்றும், அவர் தலைமைமீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அழைப்பைத் துண்டித்த கணேசமூர்த்தி, விளக்கம் கொடுத்த மல்லை சத்யா:
இது தொடர்பாக ம.தி.மு.க ஈரோடு எம்.பி-யும், பொருளாளராகவும் இருந்த கணேசமூர்த்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். `என்ன விஷயம்?' என்று அவர் கேட்க, நாம் `ம.தி.மு.க விவகாரம்' என்றதுமே... வெடுக்கென அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். அதன் பிறகு நாம் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் ஏற்கவேயில்லை!
இது குறித்து ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசியபோது, ``தி.மு.க-விலிருந்து வைகோ நீக்கப்பட்டபோது நீதிகேட்டு வந்த ஒன்பது மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி-யானதால் இப்போது ம.தி.மு.க-வில் நீடிக்கமுடியாத சூழல். சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் ஜூன் 14-ல் நடைபெறும் பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார்" எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே திருப்பூர் துரைசாமி, ``சென்னை ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தின் பெயரை வை.கோபால்சாமி என்ற தன் பெயரிலேயே வைகோ பத்திரப்பதிவு செய்துகொண்டார். அப்போது பொருளாளராக இருந்த மு.கண்ணப்பன் பெயரைக்கூட அவர் சேர்க்கவில்லை. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுக்காலமாக மாசிலாமணி, எம்.பி கணேசமூர்த்தி ஆகியோர் அந்தப் பதவியில் இருந்தனர். இவர்கள் யாரும் வங்கிக் காசோலைப் புத்தகத்தைப் பார்த்ததுகூட கிடையாது. கட்சியின் வரவு, செலவு, கணக்கு விவரம், பணம் எடுப்பது, கொடுப்பது எல்லாமே பொருளாளரின் கையெழுத்துக்கும் கவனத்துக்கும் கொண்டுசெல்லாமலேயே இத்தனை ஆண்டுக்காலம் பொதுச்செயலாளர் வைகோவே தன்னிச்சையாக எடுத்துக் கையாண்டார்" எனக் குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/Ov14I7K
0 Comments