ஆதிக்க சக்தியினரால் ஆண்டாண்டு காலமாய் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, அடிமைகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஓர் விடுதலை வெளிச்சமாக உருவானதுதான் இட ஒதுக்கீடு. இந்தியாவில் பெரும்பாலும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு மக்கள் ஒடுக்கப்பட்டிருந்ததால், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறம், இனம் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்கு நிறம் இனம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு:
அமெரிக்காவில் `நியாயமான சேர்க்கைக்கான மாணவர்கள்' (Students for Fair Admissions-SFFA) எனும் அமைப்பை நடத்திவருபவர் எட்வர்டு பிளம்(Edward Blum). முற்றிலும் இட ஒதுக்கீட்டு எதிரான நிலைப்பாடு கொண்ட இவர், அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் (University of North Carolina- UNC) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் இன மற்றும் நிற அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகக்கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடந்தார்.

பின்னர் இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்றது. வழக்கு தொடர்ந்த SFFA அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இட ஒதுக்கீடு எனும் பெயரில் வடக்கு கரோலினா, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழங்கள் மாணவர் சேர்க்கையின்போது ஆப்ரிக்க அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இதன்மூலம் வெள்ளை இனத்தவர்கள் மற்றும் ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுகிறது!" எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், ``இந்த மாணவர் சேர்க்கை விதிகள் 1964-ம் ஆண்டின் சிவில் உரிமைகள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 14-வது சட்ட திருத்தத்தின் சம பாதுகாப்பு விதிகளை மீறுவதாக இருக்கிறது!" என வாதாடினார். அதேசமயம் பல்கலைக்கழகங்கள் தரப்பில், ``இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்துவது சட்டபூர்வமானதுதான். அதை உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று வாதிடப்பட்டது.
அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த 9 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் மட்டுமே, `புறக்கணிக்கப்பட்டோருக்கு இந்த இட ஒதுக்கீட்டு நடைமுறைதான் வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது!' எனக்கூறி இட ஒதுக்கீட்டு முறை தொடர்வதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான 6 நீதிபதிகள், `இனம் மற்றும் சாதியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையை ஏற்கமுடியாது!' எனக்கூறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.

இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ``இனத்தின், நிறத்தின் அடிப்படையில் மாணவர்களின் விண்ணப்பத்தை மதிப்பிடுவது சரியாக இருக்காது. அவர்களின் திறமைகளை வைத்தே மதிப்பிட வேண்டும். இனியும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை நீடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது!" எனக்கூறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீப்பளித்தார். இறுதியில் 6-3 என்ற கணக்கில் இடஒதுக்கீடு ரத்தானது.

பாதிக்கப்படும் பூர்வகுடிகள்:
அமெரிக்காவில் நீண்டகாலமாக பின்பற்றிவந்த இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டிருப்பது பூர்வகுடி அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பால் தங்களின் உயர் கல்வி உரிமை பறிக்கப்படும், உயரிய பொறுப்புகளில் இருக்கும் பெரும்பான்மை இன ஆதிக்கத்தவர்களால் திட்டமிட்டு தங்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது என கவலை தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள்:
பல்வேறு தலைவர்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை `முற்றிலுமாக ஏற்கவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ``அமெரிக்காவில் இன்னமும் இன ரீதியிலானப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தீர்ப்பு அதை மாற்றிவிடாது!" எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, ``அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து பல தலைமுறையாக திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பை அளித்து, அவர்களும் தகுதியானவர்கள் என்பதை காட்டியது இடஒதுக்கீடு முறைதான். நான், என் மனைவி உள்பட பல தலைமுறைகளை எங்கிருக்க வேண்டும் என நிரூபிக்க வைத்ததும் இட ஒதுக்கீட்டு முறைதான். அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வாய்ப்பளிப்பதில் இடஒதுக்கீட்டு கொள்கை அவசியமானது. எனவே, உச்ச நீதிமன்றம் இப்படியான தீர்ப்பளித்திருக்கும் நிலையில், நமது இலக்கை நோக்கிய முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நேரம் இது!" எனத் தெரிவித்திருக்கிறார்.
Affirmative action was never a complete answer in the drive towards a more just society. But for generations of students who had been systematically excluded from most of America’s key institutions—it gave us the chance to show we more than deserved a seat at the table.
— Barack Obama (@BarackObama) June 29, 2023
In the… https://t.co/Kr0ODATEq3

அதேபோல ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, ``இனி தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது என் இதயம் நொறுங்குறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ``இது மிகவும் அருமையான தீர்ப்பு. இது உலகின் பிற பகுதிகளுடன் எங்களைப் போட்டியிட வைக்கும்!" எனக்கூறி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/Y2bzwhP
0 Comments