கர்நாடக மாநிலத்தில் உருபெறும் பெண்ணை ஆறு, 430 கி.மீ தூரம் பயணித்து வங்க கடலில் கலக்கிறது. இதில், விழுப்புரம் - கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 106 கி.மீ பாய்ந்து செல்கிறது. எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது தென்பெண்ணை. ஆனால், இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தளவானூர் மற்றும் எல்லீஸ் சத்திரம் தடுப்பணைகளில் 2021-ம் ஆண்டு துவக்கம் முதலே அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதங்களை சந்தித்தன. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டுமானங்களும் சமீபகாலமாக தொடர் சேதங்களைச் சந்திக்க தொடங்கின. இந்த அபாயகர நிலைக்குக் முக்கிய காரணமே, தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரிகள் செயல்பட்டபோது அதிகப்படியான மணல் சுரண்டப்பட்டதுதான் என கொதித்தனர் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும்.
இந்த நிலையில் தான், ஏனாதிமங்கலம் ஆற்றுப்பகுதியிலேயே மீண்டும் மணல் குவாரி அமைக்கப்போவதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியான நிலையில், ஜூன்- 2022 ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் ஏனாதிமங்கலம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. அப்போது பெருவாரியான மக்கள், புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதே ஏனாதிமங்கலம் பகுதியில், 11 ஹெக்டர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் 'சுற்றுச்சூழல் தடையின்மை சான்று' வழங்கியது. இது அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் கொதிப்படைய செய்தது. எனவே, அரசு ஏனாதிமங்கலம் பகுதியில் மணல் குவாரி அமைக்க முற்படுவதை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் 26.10.2022 அன்று மனு அளித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர் விவசாய சங்கத்தினர்.
அப்போதும், எவ்வித மாற்றமும் இன்றி அங்கு மணல் குவாரியை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்... நவம்பர் மாதம், ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தீர்மானம் இயற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த மக்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார்களை அனுப்பி வந்தனர். இப்படியாக அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து, மணல் குவாரி அமைவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும், கடந்த டிசம்பர் மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாதிமங்கலத்தில் செயல்பட தொடங்கியது மணல் குவாரி.
அதன் பின்னர், அந்த மணல் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான மணல் சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனிடையே, அண்மையில் ஒருநாள் ஏனாதிமங்கலம் மணல் குவாரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ராஜா என்பவரை, மறுதினமே மர்ம கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான், ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஹேமராஜன் என்ற வழக்கறிஞர், இந்த குவாரிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், `ஏற்கனவே இங்கு செயல்பட்ட மணல் குவாரிகளால் தங்கள் பகுதியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்த குவாரி புதிதாக அமைக்கப்பட்டிருப்பதாகவும்; இந்த குவாரியை முழுமையாக நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை எனவும்; ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மணலை ஆற்றில் இருந்து எடுக்கக் கூடாது எனும்போது 3 முதல் 4 மீட்டர் ஆழம் எடுக்கப்படுவதாகவும்; அரசு அனுமதியை தாண்டி 8-க்கும் மேற்பட்ட பொக்லைன் இந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும்; 24 மணி நேரமும் மணல் குவாரி இயங்குகிறது’ என்பதையெல்லாம் உள்ளடக்கி அம்மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, "2 பொக்லைன் இயந்திரமே செயல்பட அனுமதி உள்ளபோது, சுமார் 6 பொக்லைன் இயந்திரம் இருப்பது ஆதாரமாக இணைக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிகிறது. சுமார் 10 நிபந்தனைகளை மீறி இருப்பதாக தெரிகிறது..." எனத் தெரிவித்தார். எனவே, இந்த மணல்குவாரி செயல்படுவதற்கு இடைகால தடை விதிக்கிறேன் எனவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உட்பட மனுவில் கூறப்பட்டுள்ள மற்ற 7 அரசுத்துறை அதிகாரிகளும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/vpSAGdR
0 Comments