தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி முந்தைய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அப்போதைய பா.ஜ.கவின் மாநில தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை செளந்தர ராஜன் போட்டியிட்டார். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் தி.மு.க வேட்பாளராக கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலேயே மீண்டும் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.
கனிமொழிக்கு எதிராக அ.தி.மு.க வேட்பாளர் அல்லது அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க வேட்பாளர் களமிறங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்படும் நிலையில், முந்தைய தேர்தலில் தமிழிசை களமிறங்கியதைப் போல, முன்னாள் ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா களமிறங்குவார் என பா.ஜ.கவினர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க இளைஞரணியைச் சேர்ந்த 108 பேர் திருச்செந்தூர் கடலில் புனித நீராடிவிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் கிரிப் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும், பால்காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடியிடம் பேசினோம், ``பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழராகவே பார்க்கிறோம். தமிழக மக்களும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள்.
அவரைப் போல தமிழுக்கு பெருமை சேர்த்த ஒரு தலைவர் வரலாற்றில் கிடையாது. இந்தியாவிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வெள்ளையத்தேவன், பூலித்தேவன், பாரதியார் என அதிக எண்ணிக்கையிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த ஊர். இப்படிப்பட்ட வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பிரதமர் போடி வரும் தேர்தலில் போட்டியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். எங்களின் கோரிக்கையும் வேண்டுதலும் அதுதான். மோடி இந்த தொகுதியில் போட்டியிட வேண்டி முருகப் பெருமானுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தும், பால்காவடி எடுத்தும் நாங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளோம்” என்றார்.
from India News https://ift.tt/q7wM9Rp
0 Comments