அசோக் கெலாட் vs சச்சின் பைலட்... தனித்தனியே சந்திக்கும் தலைமை! - கைகொடுக்குமா கர்நாடகா பார்முலா?!

ராஜஸ்தானில் உட்கட்சிப் பூசலால் காங்கிரஸ் கட்சி அல்லாடுகிறது. இந்நிலையில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் தனித்தனியே சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்-க்கும், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்க்கும் இடையே அதிகாரப்போர் நடந்துவருகிறது.

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்,

இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் மாநில அரசிடம் தான் முன்வைத்த, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக சச்சின் பைலட் அறிவித்திருந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த காலக்கெடு நிறைவடையவிருக்கும் நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் மேலிடம் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான கூட்டம் மே 26 அன்று நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

ஒருவேளை இந்தக் கூட்டம் நடந்திருந்தால், ராஜஸ்தான் தலைவர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே சமாதானம் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை என்பதால் இருவரையும் தனித்தனியே சந்திக்க முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

மேலும், கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி கே சிவக்குமார் ஆகியோரை ஒன்றிணைப்பதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றிருப்பதாக நம்புவதால், ராஜஸ்தானிலும் அதே ஃபார்முலாவை முயற்சிக்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில், ராஜஸ்தான் மாளிகை அமைக்க அடிக்கல் நாட்ட வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் பைலட் - அசோக் கெலாட்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரை ஒரே மேடையில் கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.



from India News https://ift.tt/KLIeTCZ

Post a Comment

0 Comments