`விவாதிக்க நான் ரெடி' `இல்லை, நானும் ரெடி'- பொன்முடி Vs அண்ணாமலை; வார்த்தைப்போரில் நடப்பதென்ன?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்வழி பாடப்பிரிவு பற்றி நேற்று முன்தினம் விழுப்புரத்தில் செய்தியார்களைச் சந்தித்துப் பேசினார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அப்போது அவர், "அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, இப்போது என்ன நடக்கிறது என்பதும் தெரியாது. அவர் காலத்திலா தமிழ் மொழி கொண்டு வந்தார்கள்... யார் காலத்தில் கொண்டு வந்தது... மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலே மூன்றாவது மொழி என்பதை எதற்கு கட்டாயமாக்கினீர்கள்... அதற்கு அண்ணாமலையை பதில் சொல்லச் சொல்லுங்கள்? மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை வரவேற்கிறாரா... அதற்கு முதலில் அண்ணாமலையை பதில் சொல்லச் சொல்லுங்கள். நேருக்கு நேராககூட விவாதிக்கத் தயார். அவர் தயாராக இருந்தால் வரட்டும்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

அண்ணாமலை - பொன்முடி

இதனிடைய கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நான்கு நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழ்வழி படிப்பை நிறுத்திவிட்டார்கள். அதைக் கண்டித்து நாங்கள் அறிக்கை கொடுத்தோம். `இல்லை, எங்களுக்குத் தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் செய்துவிட்டது' எனச் சொல்கிறார்கள். ஆனால், அகாடமிக் கவுன்சில் அறிக்கையில் தெளிவாக இருக்கிறது. ஆக, அமைச்சர் பொன்முடி அவர்கள் பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். இதிலே தமிழக அரசுக்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. 

தமிழ்வழி கல்வியை மூடிவிட்டு, சில தனியார் கல்லூரிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக இதை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். விவாதத்துக்கு அழைக்கிறார் அமைச்சர் பொன்முடி, நானும் விவாதத்துக்குத் தயார். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வாருங்கள், என் மகனை முதல் ஆளாக கொண்டு வந்து சேர்க்கிறேன். பொன்முடி அவர்களுக்குச் சவால் விடுகிறேன்... உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எங்கு படித்தார்கள்... இருமொழியா... மும்மொழியா... ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் இருமொழியா... மும்மொழியா? ஆக, விவாதத்துக்கு வரும்போது இதையெல்லாம் தயாராக வைத்துக்கொண்டு வாருங்கள். விவாதத்தில் பேச வேண்டிய விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன. விவாதத்துக்கு நீங்கள் கூப்பிட்டிருக்கிறீர்கள், இடத்தையும் நேரத்தையும் நீங்களே குறித்து சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார்.

பொன்முடி

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நேற்று நான் சொன்ன செய்திக்கு இன்று அண்ணாமலை பதிலளித்திருக்கிறார். அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. நேரடியாக விவாதிக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறார், நானும் தயார். சென்னையில், எந்த இடத்தில் எந்த பொதுக்கூட்டத்தில் பேசலாம் எனச் சொல்கிறாரோ அந்த இடத்தில் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். 'மும்மொழிக் கொள்கை', 'தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம்?', 'இருமொழிக் கொள்கை தமிழகத்தில் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது' என்பதையெல்லாம் எடுத்துப் பேச நான் தயாராக இருக்கிறேன். முன்பே நான் சொன்னேன், அவர் ஓர் அரைகுறை என்று. வரலாறும் தெரியாது, நடக்கிற நிகழ்ச்சியும் தெரியாது. 

அவர் சொல்கிறார்... `அரசாங்கத்துக்குத் தெரியாமலா இது நடந்துவிட்டது' என்று. அரசாங்கத்துக்குத் தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது. உதாரணமாக, ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார்கள். இந்தியாவின் புதிய கல்விக்கொள்கை பற்றி பேசுவதற்காக ஜூன் 5-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று துணைவேந்தர்களுக்கு எல்லாம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். இணை வேந்தரான எனக்கே அது தெரியாது. ஆனால், அண்ணாமலைக்கு அது தெரிந்திருக்கும். ஏனெனில், அவர் ஆளுநருடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். அரசுக்குத் தெரியாமலே இதெல்லாம் நடக்கிறது, அதுவும் உயர் கல்வித்துறையில்.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டினுடைய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஒரு குழுவை அமைத்து, அதற்கான அறிக்கை வரவிருக்கும் இந்தச் சூழலில், துணைவேந்தர்களையெல்லாம் அழைத்து புதிய கல்விக் கொள்கை பற்றி விளக்கம் கொடுப்பதற்கு ஒரு வேந்தருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதுவும் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல், அதன் கொள்கை முடிவுக்கு எதிராக ஒன்றை செய்ய முற்படுவது யார்... இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரியாதா... அண்ணாமலைக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், 'சிண்டிகேட்டில் பரந்தாமன் இருந்தாரே, அவருக்குத் தெரியாமல் நிறைவேறியதா' என்று கேட்கிறார்.

கடைசி சிண்டிகேட் மீட்டிங் நடந்தது ஏப்ரல் 20-ம் தேதி. அகாடமிக் கவுன்சிலில் நிறைவேற்றியதை இங்கு வந்து சொல்லியிருக்கிறார்களே தவிர சிண்டிகேட்டில் இது சப்ஜெக்ட்டாக வரவில்லை. சிண்டிகேட்டில் உறுப்பினராக இருந்த உதயநிதி அவர்கள் ஏப்ரல் 17-ம் தேதி ராஜினாமா செய்துவிட்டார். அதனை அரசு சட்டமன்றத்தில் காலி இடமாக அறிவித்த நிலையில், 21-ம் தேதிதான் பரந்தாமன் அந்த இடத்துக்கு அறிவிக்கப்பட்டார். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து அவருக்கு தகவல் போனதே இம்மாதம் 5-ம் தேதிதான். இப்படி இருக்க, அண்ணாமலை பரந்தாமனைச் சொல்கிறார். அண்ணாமலை அவர்களே... தயவு செய்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு துணைவேந்தரிடம் நல்ல நெருக்கம் உண்டு. இவற்றை அவரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அண்ணாமலை, தமிழ் வழி கல்வியிலே அக்கறை உள்ளவராக இருந்தால், முதலில் ஆளுநரைச் சந்தித்து இதற்கெல்லாம் விளக்கம் கேட்க வேண்டும். ஏன் இணைவேந்தரை அழைக்கவில்லை, தமிழக அரசுக்கு ஏன் அறிவிப்பை சொல்லவில்லை என்றெல்லாம் அவர் கேட்பார் என நான் நம்புகிறேன். ஏனெனில், அவர் அந்த அளவுக்கு இங்கு அரசியல் செய்ய நினைக்கிறார். நாங்கள் அரசியல் செய்ய நினைக்கவில்லை. எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் தமிழை வளர்க்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம். 

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அண்ணாமலை அவர்களே, தயவு செய்து நடைமுறை நிகழ்வுகளை புரிந்து கொள்ளுங்கள். தெளிவாக தெரிந்து கொண்டு அறிக்கை விடுங்கள். வாருங்கள், நேரடியாகப் பேசுவதற்கு இந்த பொன்முடி என்றும் தயாராக இருக்கிறேன். கூடுதல் மொழிகளை மாணவர்கள் படிப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே. 'கட்டாய பாடம்' என்பதைத்தான் எதிர்க்கிறோம். உங்கள் பிள்ளை 50 மொழிகள்கூட படிக்கட்டும், அதில் எங்களுக்கொன்றும் கிடையாது. புதிய கல்விக் கொள்கையிலே மூன்று மொழிகள் கட்டாயப் பாடம். அதில் எங்காவது மாநில மொழி கட்டாயப் பாடம் என்று சொல்லியிருக்கிறார்களா? சம்ஸ்கிருதம், இந்திக்கு ஊக்கத்தொகை அறிவிப்பதாகச் சொல்பவர்கள்... தமிழுக்கென ஏதும் சொல்லவில்லை.

அமைச்சர் பொன்முடி

'கோயிலில் சம்ஸ்கிருதம் வேண்டாம். தமிழே இருக்கட்டும்' என்று அண்ணாமலையைச் சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்... இவர்களின் நோக்கம் இந்தியைப புகுத்த வேண்டும் என்பதுதான் என நான் சொல்லியிருக்கிறேன். அந்தக் காலத்திலிருந்து இந்திக்கு எதிராகப் போராடிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு, 'தமிழ்நாடு' என்று பெயரை வைத்ததே எங்கள் ஆட்சியில்தான். முதலில் சி.பி.எஸ்.சி-யில் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கச் சொல்லுங்கள். இரண்டு வருடங்களாக அரசியலில் இருந்துவிட்டுப் பேசுகிற அண்ணாமலை அவர்களே... தெளிவாக வரலாற்றையும் படியுங்கள், நடைபெறும் அரசியலையும் படியுங்கள், பேப்பரை ஒழுங்காக படிக்க கற்றுக்கொள்ளுங்கள். அண்ணாமலை அவர்களே நேரில் வாருங்கள், நாம் வாதிடுவோம். நல்ல கருத்துகளை நீங்கள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், எதையும் அரசியலாக்க நினைக்காதீர்கள். அண்ணாமலை, எந்த 'ஃபைல்' வெளியிட்டாலும் அதைச் சந்திக்க தி.மு.க தயார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை" என்றார்.



from India News https://ift.tt/n38LtIo

Post a Comment

0 Comments