இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வில்லிவாக்கம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கோயில் நிர்வாகத்துக்காக கார் வாங்கியது தொடர்பாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். பாவம்... கர்நாடகாவில் வெயில் அதிகமாக இருக்கிறது என்பதால், தினமும் யார் மீதாவது எதாவது குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லையென்றால் அவருக்குப் பொழுது போகாது.
கோயில் நிர்வாகத்தின் வசதிக்காக கார் வாங்கப்பட்டது. இதில் ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறதா? அதிக தொகை கொடுத்து கார் வாங்கப்பட்டதா? இல்லை என்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்கு அது பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கூறவேண்டுமல்லவா...? இது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகப் பேசப்படுகிறது. வேலையற்ற வீணர்களின்.... மீதியை நீங்களே சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவர்களுக்கு எதிராக மானநடஷ்ட வழக்கு தொடர்வதை விட, நமக்கு அதை விட முக்கிய வேலைகள் இருக்கிறது. இதுவரை ரூ.4,225 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை மீட்டிருக்கிறது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி. ஆளுநர் குற்றம்சாட்டிய 50 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு கடந்த ஆட்சியிலும் இருந்தது. அதில் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த ஆட்சியில் தான் மீட்டிருக்கிறோம். 1.11 லட்சம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு கோயில் நிர்வாகங்களிடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம். இந்த நில மீட்பில் 6 பா.ஜ.க-வினர் ஆக்கிரமித்த இடங்களையும் மீட்டிருக்கிறோம்.
சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமண விவகாரத்தில் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது சட்டத்தின் ஆட்சி. தவறு எங்கு நடந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 1930-ம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்ணுரிமை பேசும் நாட்டில், குழந்தைத் திருமணம் தொடர்பாகப் பெறப்பட்ட 4 புகார்களின் அடிப்படையில், விசாரிக்கப்பட்டதே தவிர, இரட்டை விரல் சோதனை செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பிலும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் செய்யப்பட்ட பரிசோதனையில் கூட பெண் மருத்துவர்கள்தான் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
சட்ட விதிமீறல் செய்பவர்கள் சிதம்பர தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதா என ஆளுநர் விளக்க வேண்டும். மேலும், ஆளுநர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்பதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் என்ன ஆண்டவரா? தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சிதான் நடைப் பெறுகிறது. ஒட்டுமொத்த ஒன்றியத்துக்கே ஆளுநர் தேவையில்லை என்பது தான் தி.மு.க-வின் கொள்கை.
ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காக ஆளுநர் பொய்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் முதல்வர் அனைத்தையும் எதிர் கொள்வார். காலாவதியானது திராவிட மாடல் அல்ல. ஆளுநர் எந்த கட்சியை முன்னிலைப் படுத்தி வருகிறாரோ, அந்தக் கட்சி தமிழ்நாட்டில் காலாவதியாகிவிடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/5uEl247
0 Comments