காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், வயநாடு முன்னாள் எம்.பி ராகுல் காந்தியும் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்த கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கிடையே நிலவிய பனிப்போருக்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுகத் தீர்வு காணப்பட்டது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தானில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில் அங்கு முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்குமிடையே நிலவிவந்த அதிகார மோதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்குள் நிகழும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். அசோக் கெலாட்டும், பைலட்டும் தேசியத் தலைவரை ஒரே நேரத்தில் சந்தித்தது இதுதான் முதன்முறை எனக் கூறப்படுகிறது. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ``நாங்கள் ஒற்றுமையாகத் தேர்தலில் போராட முடிவுசெய்திருக்கிறோம்.
கண்டிப்பாக, ராஜஸ்தான் தேர்தலில் வெற்றிபெறுவோம் என அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டனர்" எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ராஜஸ்தானில் ஏற்பட்டிருந்த சலசலப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
from India News https://ift.tt/41w3nES
0 Comments