சென்னை மாநகர பேருந்துகளுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமனமா?! - திடீர் ஸ்டிரைக் பின்னணி!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தினம்தோறும் பயணித்து வருகிறார்கள். இதற்கிடையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும், அடுத்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது.

பேருந்து நிறுத்தப் போராட்டம்

மேலும் இந்த பேருந்துகளை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து பணிமனைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், "தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கி கருத்துரு அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் பஸ்களை அரசு - தனியார் கூட்டாக இணைந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய மட்டுமே தற்போது குழு அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் மின்சார பஸ்கள் அரசின் வழித்தடத்தில் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இயங்கும்.

சிவசங்கர்

அதிக பொருட்செலவில் மின்சார பஸ்கள் வாங்கப்படுகிறது. எனவே அவற்றை இயக்கும்போது நடைமுறைச் சிக்கல்களை தடுக்கும் வகையில் தான் தனியார் பராமரிப்பில் இயக்க இருக்கிறோம். அரசு வழித்தடங்கள் தனியாருக்கு வழங்க மாட்டோம். அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.

இதற்கிடையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவிலே பணிக்கு வரவுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மாநகர பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகளை கீழே இறக்கிவிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பேருந்து

மேலும் பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் என சென்னையில் இருக்கும் 33 போக்குவரத்து பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் தொழிற்சங்கமான தொமுச சார்பிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது அவர்கள், "அவுட் சோர்ஸிங் முறையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பணியாளர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர். திடீரென நடந்த இந்த போராட்டத்தினால் கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு திரும்பியவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தமிழக அரசு

பல்வேறு இடங்களில் இருக்கும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் எடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தொமுச பேரவையின் பொதுசெயலாளர் சண்முகம், "தனியார் பங்களிப்புடன் பேருந்துகளை இயக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலார்கள் நியமனம் செய்வதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டோம். பிறகு முதல்வர் போக்குவரத்துத்துறையில் தனியார் மயம் இருக்காது என உறுதியளித்திருக்கிறார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டிருக்கிறோம். முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

கமலக்கண்ணன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன், "எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த போராட்டம் நடந்திருக்கிறது. இதில் திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்" என்றார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் இறுதி முடிவு தெரிய வரும்!



from India News https://ift.tt/oKdqYhS

Post a Comment

0 Comments