வெறுப்புப் பேச்சுகள்... சமீபத்தில் சமூகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் இவையும் ஒன்று. எதிர்த்தரப்பினரை அரசியல்ரீதியாக, சித்தாந்தரீதியாக விமர்சிப்பது உரிமை என்றாலும், எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது என்பதைச் சிலர் புரிந்துகொள்வதில்லை. சாதிரீதியாகவும், மதரீதியாகவும் விமர்சனங்கள் அதிக அளவில் முன்வைக்கப்படுவது கண்கூடு. இது போன்ற வெறுப்புப் பேச்சுகளை அள்ளி வீசுகிறபோது சமூகத்தில் அமைதி சீர்குலைந்து, சில வேளைகளில் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. வரம்பு மீறியும் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசுபவர்கள்மீது அரசு இயந்திரம் வழக்கு பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முழுவீச்சில் இவை நடைபெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுகிறது.
வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மதச்சார்பற்ற தன்மையை நிலைநிறுத்துவது நம் அனைவரின் கடமை. அதைப் பொருட்படுத்தாமல் வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாகப் பேசிய நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். இது போன்ற வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்தியவர்கள்மீது யாரும் புகார் அளிக்காவிட்டாலும், அரசே முன்வந்து அவர்கள்மீது வழக்குகளைப் பதிவுசெய்து, கைதுசெய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
நம்முடன் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன், ”காவல் அதிகாரிகள் சுயமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திடும் சுதந்திரமெல்லாம் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்னதான் அறிவுரைகளை முன்வைத்தாலும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுத்திடவும், அவ்வாறு பேசுபவர்களைத் தண்டித்திடவும் அதிகாரம் படைத்தவர்கள் ஆளுங்கட்சியினர் மட்டுமே. மத்தியிலும், மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களும் முறையாக நடவடிக்கை மேற்கொள்கிறார்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டில்கூட பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க பிரமுகர் சைதை சாதிக் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன... தரம் தாழ்ந்த வகையில் பேசிவரும் மற்றொரு தி.மு.க பிரமுகர் சிவாஜி என்பவர்மீது தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?
வட இந்தியாவைப் பொறுத்தவரை சான்றுகள் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லவே இல்லை. இஸ்லாமியர்கள் குறித்துத் தொடர்ச்சியாக ஆளும் தரப்பினரே பேசிவருகின்றனர். ஆனால், கண்டுகொள்ளாமலேயே மத்திய அரசும் இருக்கிறது. வெறுப்புப் பேச்சுகள் நிகழாமல் இருக்க, முதலில் அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேசுவது அவசியம். ஆளுநர் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதல்வரை எப்போதும் ஒருமையில்தான் பேசிக்கொண்டிருக்கிறார். இவர்களே இப்படிப் பேசினால் தொண்டர்கள் எப்படிப் பேசுவார்கள் என சொல்லவா வேண்டும்” என வினவிய அவர், “மத்திய, மாநில அரசுகள் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள்மீது கட்சி பேதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிட்டும்” என்கிறார் அவர்.
``நீதிமன்றம் ஒரு நல்ல எண்ண அடிப்படையில் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. வெறுப்புப் பேச்சுகளை உண்மையிலேயே இந்தச் சமூகத்திலிருந்து நீக்க வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் வெறுப்புப் பிரசாரங்களைத் தடுக்கும் நோக்கிலும், அரசியல் கட்சிகள் வெறுப்பு பிரசாரங்களைத் தவிர்க்கும் வகையிலும் செயல்படுவது காலத்தின் கட்டாயம். ஒரு பெரும்பான்மை மதத்தவர் மத்தியில் பேசுகிறபோது, சிறுபான்மை மதித்தவரை விமர்சித்துப் பேசுவது இன்றைய அரசியலில் வாடிக்கையாகிவிட்டது என்பது மிகவும் வருந்தத்தக்கது.
அதேசமயம் சாமானிய மக்களுக்கு இதில் தலையாய பங்கிருக்கிறது. இன்று பெரும்பாலான வெறுப்புப் பேச்சுகள் மக்களைக் கவர்வதற்காகவும், சீக்கிரம் பிரபலம் அடையவும் நிகழ்த்தப்படுகின்றன. ஒருவேளை இவ்வாறான வெறுப்பு கருத்துகளை மக்களே வெறுக்கத் தொடங்கிவிட்டால் உறுதியாக வெறுப்புணர்வை விதைக்கும் நோக்கில் பேசுவதும் குறைந்துவிடும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் சிலர்.
from India News https://ift.tt/aM6rYpN
0 Comments