தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்தும், அவர்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார்கள் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோதான் தமிழ்நாட்டு அரசியலில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க-வினர் ஒருபக்கம் ஆளுநரிடம் புகாரளித்தனர். அ.தி.மு.க-வினர் இதற்கும் ஒருபடி மேலே சென்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா-வைச் சந்தித்து இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் எனப் புகாரளித்துவிட்டு வந்தனர்.
ஆடியோ போலியானது, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வெட்டி ஒட்டப்பட்டுள்ளது எனப் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பி.டி.ஆரே இறங்கி வந்து இரண்டு ஆடியோக்களுக்கும் வீடியோ, அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப் போகிறார்கள். அதில் ஆடியோ விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் பொறுப்பு மாற்றப்படலாம் எனப் பல்வேறு தகவல்கள் உலா வந்தன.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் இந்த ஆடியோ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் அளிக்க விரும்பவில்லை. ஆடியோ குறித்து அமைச்சரே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளார்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நிதியமைச்சரைச் சந்திக்கவே நேரம் கொடுக்கப்படவில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில் முதல்வரின் இந்தப் பதில் அரசியல் தளத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த அரசியல் பின்னணியில் என்ன இருக்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம்.
நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “பி.டி.ஆர் ஆடியோ வெளியானதில் முதல்வர் தரப்பில் மனக்கசப்பு இருந்தது உண்மைதான். நிதி அமைச்சரைச் சந்திக்க நேரம்கூட ஒதுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், நிதி அமைச்சர் கடந்த வியாழன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து முதல்வரிடம் இந்த ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார். அதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனச் சொன்னாராம். முதல்வர் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். அதன்பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
அப்போது பி.டி.ஆரிடம் இருக்கும் நிதி அமைச்சர் பதவியை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கலாம் எனவும் பி.டி.ஆருக்கு தொழில்துறை அல்லது இந்து சமய அறநிலையத்துறை கொடுக்கலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால், முதல்வரின் குடும்பத்தில் முக்கியமானவர் ஒருவர் ‘பி.டி.ஆரை மாற்றுவதாக நாம் முடிவு செய்தால் அதைவிட மோசமான முடிவு வேறு எதுவும் இருக்காது. பா.ஜ.க-வின் குரலுக்கு நாம் செவி சாய்த்ததாக ஆகிவிடும். அதுமட்டுமல்ல அந்த ஆடியோவில் பி.டி.ஆர் பேசியது உண்மை. அதனால்தான் இந்த மாற்றம் என்ற பேச்சு எழும். எனவே இப்போதைக்கு இந்த முடிவை ஒத்தி வைப்பதுதான் சரியாக இருக்கும்’ என ஆலோசனை சொன்னார்.
இதையடுத்து இப்போதைக்கு பி.டி.ஆரை மாற்றும் முடிவை முதல்வர் தரப்பு கைவிட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஆடியோ விவகாரத்தில் முதல்வர் கொடுத்த விளக்கம்.” என்றார்.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர் ஒருவர்… “கருணாநிதி காலத்தில் வைகோவின் கடித்தத்தை ஒட்டி அரசியல் செய்யப்பட்டது போல இப்போது பி.டி.ஆரின் ஆடியோவை வைத்து பா.ஜ.க அரசியல் செய்ய நினைக்கிறது என்பதுதான் தலைமைக்குச் சொல்லப்பட்ட ஆலோசனை. முதலில் கோபத்தில் இருந்த தலைமை இந்த ஆலோசனையால் ஓரளவு சமாதான முடிவுக்கே வந்துவிட்டது. ஆனாலும் இதை இப்படியே விட்டால் எல்லோரும் பேசத் தொடங்குவார்கள். அதற்கு அவரவர் நோக்கத்துக்கு விளக்கமும் அளிப்பார்கள் என்பதாலேயே அமைச்சரவை மாற்றம், நிதி அமைச்சருக்கு நேரம் கொடுக்காதது என இவ்வளவையும் தலைமை நடத்தியிருக்கிறது. இதன்மூலம் நிதி அமைச்சருக்கு மட்டுமல்ல மற்ற அமைச்சர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்துள்ளது தலைமை.
முதல்வரின் விளக்கத்தால் இப்போதைக்கு பி.டி.ஆரின் அமைச்சர் பதவிக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் இவையெல்லாம் விவாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகுதான் பி.டி.ஆர் பதவி தப்பியதா அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதா என்பவை குறித்துத் தெரிய வரும்… அதுவரை தலைமை என்ன முடிவு செய்கிறது என்பது அவர்களுக்கே வெளிச்சம்…” என முடித்துக்கொண்டார்.
from India News https://ift.tt/zoTV2GP
0 Comments